தற்போதைய செய்திகள்

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலை

ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் கோயில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் ஆரணி நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான எஸ்.ராமச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் ஆர்.கே.நகர் மணிமாறன், ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினர். கூட்டத்திற்கு நகர செயலாளர் எ.அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு வரவேற்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

குடிமராமத்து பணிகள் மூலம் ஆரணி பகுதியில் சுமார் 50 ஏரிகள் தூர் வாரப்பட்டு மழைநீர் தேக்கி நீர் ஆதாரம் பெருக்கப்பட்டுள்ளது. ஆரணி பகுதியில் எஸ்.வி.நகரம், தேவிகாபுரம், காமக்கூர், ஆரணி கைலாய நாதர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களுக்கு புதியதாக தேர் செய்யப்பட்டுள்ளது. ஆரணி கைலாய நாதர் கோயில் தேர் செல்லும் பாதை ரூ.60லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. ஆரணி நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது. ஆரணி காய்கறி மார்க்கெட் கடைகள் கடந்த ஆண்டு தொடர்மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் வியாபாரிகள் கோரிக்கையையேற்று 141 கடைகள் புதியதாக ரூ2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு 26-ந்தேதி (இன்று) திறக்கப்பட இருக்கிறது.இவ்வாறு எண்ணற்ற திட்டங்கள் ஆரணி தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் என்றென்றும் கழக அரசுக்கு ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

முன்னதாக அமைச்சர் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.