தற்போதைய செய்திகள்

நாகப்பட்டினம் அருகே ரூ.100 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகத்துக்கு அடிக்கல் – அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்- ஓ.எஸ்.மணியன் பங்கேற்பு

நாகப்பட்டினம், செப்.12-

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஜெயக்குமார். பேசியதாவது:-
மீன்வளம் மற்றும் மீனவர்களின் மேம்பாட்டினை உயர்த்த, அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உலகத் தரம் வாய்ந்த கடலோர உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், தமிழகத்தில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதளங்கள் அமைத்தல், மாற்று மீன்பிடிப்பு முறையான ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவிக்க சூரை மீன் பிடிப்பிற்கு மானியம் அளித்தல் மற்றும் நவீன மீன் அங்காடிகள் அமைத்தல் போன்ற புதுமையான திட்டங்களை மீன்வள மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும் மீன்பிடிப்பு, மீன்வளர்ப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த தொழில்கள் உணவு வழங்குவதிலும், உணவுப் பாதுகாப்பினை அளிப்பதிலும், மிக முக்கிய பங்கு வகிப்பதோடு, கடலோர பகுதியிலுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவும், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்து, அவர்களது வாழ்வு மகிழ்ச்சியடையவும், மீன்வளத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர்களின் மேம்பாட்டினை உயர்த்த முதல்வரால் 20.09.2017 அன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தரங்கம்பாடி மற்றும் வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், மத்திய அரசின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டம், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் 11.07.2019 அன்று அறிவித்த அறிவிப்பின் படி, வேதாரண்யம் வட்டம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்காகவும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் பட்டினச்சேரி பகுதியில் வெட்டாற்றின் வடக்குப் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நேர்கல் சுவர் அமைத்திடவும் மற்றும் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்காகவும் தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கும் பணிகள் நிறைவுற்று, பயன்பாட்டுக்கு வரும் போது, இப்பகுதியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.

முன்னதாக 10 பயனாளிகளுக்கு மத்திய அரசின் நீலப்புரட்சித் திட்டத்தின் (2018-2019) கீழ் நாட்டுப் படகுகளை இயந்திரமாக்கும் திட்டத்தில் 40 சதவீதம் மானியத்தில் ரூ.2,71,170 மதிப்பீட்டில் வெளிப்பொருத்தும் இயந்திரங்களையும், பன்னாட்டு வேளாண் நிதி உதவியுடன் கூடிய சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட சிறு படகுகளின் உரிமையாளர்கள் 50 நபருக்கு காப்புறுதித் தொகையாக ரூ.7,72,500 மதிப்பிலான காசோலைகளையும் அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சீ.சுரேஷ்குமார், நாகப்பட்டினம் சார் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் மீன்வளத்துறை இயக்குநர் ஜி.எஸ்.சமீரான், செயற்பொறியாளர் (மீன்பிடித் துறைமுகம்) எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.