தமிழகம்

102 உள்ளாட்சிப் பதவிகளுக்கு மார்ச் 4-ல் மறைமுக தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை

102 உள்ளாட்சிப் பதவிகளுக்கு மார்ச் 4-ந்தேதி மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 11.1.2020 மற்றும் 30.1.2020-ல் நடைபெற்ற சாதாரண மறைமுகத் தேர்தல்களின்போது பல்வேறு காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்ட 1 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி, 1 மாவட்டஊராட்சி துணைத்தலைவர் பதவி, 11 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவி, 18 ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவி, 71 கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவி ஆகிய 102 பதவியிடங்களுக்கு 4.3.2020 அன்று மறைமுகத் தேர்தல் நடத்தப்படும்.

மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு அன்று காலை 10.30 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு பிற்பகல் 3 மணிக்கும் தேர்தல் நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.