தற்போதைய செய்திகள்

சென்னை திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம் – அமைச்சர் டி.ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.

சென்னை:-

சென்னை திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகத்திற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகியவை சுமார் 134 கி.மீ, தூர நீளம் வங்காள விரிகுடா கடல் பரப்பின் ஓரம் அமைந்துள்ளன. இந்த 3 மாவட்டங்களிலிருந்தும் லட்சகணக்கான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்காக 1980-ல் சென்னை காசிமேட்டில் 570 படகுகளை கையாளும் விதமாக மீன்பிடிதுறைமுகம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 2000 விசை படகுகளும் சிறிய படகுகளும் தினமும் கையாளப்படுகின்றன. இதனால் இங்கு அதிக அளவில் இட நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் இத்துறைமுகத்திலிருந்து அண்மை கடல் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப்பால் சூரை வகை மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இவற்றிற்கு அதிகப்படியான ஏற்றுமதி தேவைகள் உள்ளன.

எனவே, ஆழ்கடல் மீன்பிடி தொழிலை ஊக்கப்படுத்தவும் சூரை வகை மீன்களை அதிக அளவில் பிடித்து ஏற்றுமதி செய்திடவும், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் இட நெருக்கடியை குறைந்திடவும் முதலமைச்சர் 110 விதியின் கீழ் 06.06.2018 அன்று சட்டப் பேரவையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் சென்னை திருவொற்றியூர் குப்பத்தில் சூரை மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.

இதனைத்தொடந்து திருவொற்றியூரில்  புதிய மீன்பிடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றநது. மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ெஐயக்குமார் அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அம்பத்துர் சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டர், மீன்வளத்துறை இயக்குநர் டாக்டர்.ஜி.எஸ். சமிரான், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இத்துறைமுகம் அமைவதன் மூலம் சுமார் 500 விசை படகுகள் 300 சிறிய வகை படகுகள் நிறுத்தும் வசதியும் மீன்களை பதப்படுத்துவதற்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். மேலும் சுகாதாரமான முறையில் கையாளுவதற்கு வசதிகள் இருப்பதால் மீன்களின் தரம் குறையாமல் பாதுகாக்கப்படும். எனவே மீன்களின் விலை மதிப்பு உயர்ந்து தங்களின் மீன்களை அதிக விலைக்கு விற்க இயலும். இதனால் அவர்களின் பொருளாதாரமும் மேம்படும்.