தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ஆர்வம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி…

மதுரை:-

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர். வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் வெள்ளை மனதுடன் பார்த்தால் நன்மை தெரியும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

முதல்கட்டமாக 8,300 கோடியில் முதலீட்டை ஈர்த்து 35000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி மாபெரும் சகாப்தம் படைத்த முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் வெள்ளை மனதுடன் பார்த்தால் கண்ணில் நன்மை தெரியும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து பேசினார்

வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் அருளாசியோடு தமிழக அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு சரித்திர சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார்.

ஏற்கனவே இருந்த முதலமைச்சர்கள் தமிழக மக்களுக்காக பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார்கள். அதை மக்கள் நன்றாக அறிவார்கள். ஆனால் தற்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உலக முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் அவர்களை முதலீடு செய்ய வைத்து அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் முதலமைச்சர் தலைமையில் சென்ற குழுவில் நான் சென்றதை மதுரைக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். சாதாரண தொண்டனான எனக்கும் இந்த வாய்ப்பினை தாய் உள்ளத்தோடு வழங்கிய முதலமைச்சருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் நியூயார்க் நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அதில் முதலீட்டாளர்கள் பங்கேற்று மிகப்பெரிய வரவேற்பை முதலமைச்சருக்கு கொடுத்தனர். அவர்களில் சில பேர் சொன்னார்கள், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலத்தை சேர்ந்த முதலமைச்சர்கள் ஆண்டிற்கு இரண்டு முறை வருவார்கள். தமிழக முதலமைச்சர் வரவில்லையே என்ற ஏக்கம் எங்களிடம் இருந்தது. அந்த ஏக்கத்தை நீங்கள் போக்கியுள்ளீர்கள். இதன் மூலம் எங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது என்று தெரிவித்தனர்.

அதன் பின் உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைத்திடவும், வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கவும் யாதும் ஊரே என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, முன்னேற்றம் தான் முக்கியம். அதற்காக நாங்கள் எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறியதோடு தொழில் தொடங்க பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

அதன்பின் சான்பிரான்சிஸ்கோவில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் ஒப்பந்த கூட்டம் நடைபெற்றது. அங்கேயும் யாதும் ஊரே என்ற நிகழ்ச்சியில் தகவல்தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்தவர்களை காணும் பொழுது மிகப்பெரிய சந்தோசம் அடைந்தோம். தகவல் தொழில்நுட்பத்துறையில் உலகம் முழுவதும் சாதனை படைத்தவர்கள் நமது தமிழ் சமுதாய மக்களே ஆவார்கள்.

அதனை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சுற்றுலாவை மையமாக வைத்து எப்படி மக்களை ஈர்ப்பது என்று முதலமைச்சர் ஆராய்ந்தார். பின்னர் பஃபல்லோ நகரில் கால்நடை வளர்ப்பு பற்றிய கருத்துக்களை கேட்டறிந்தார். இதன் மூலம் தமிழகத்தில் இத்திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை வளர்ச்சிபாதையில் கொண்டு செல்வதே முதலமைச்சரின் நோக்கமாகும்.

முதலமைச்சரின் 13 நாள் வெளிநாட்டு பயணத்தில் ரூ.8300 கோடி மதிப்பில் 41 தொழில் நிறுவனங்களுடன் முதல் கட்டமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் 35000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இது முதல் கட்டம் தான். அடுத்து இன்னும் அதிகமாகும். ஆனால் இன்றைக்கு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சியினர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். வெள்ளை மனதுடன் பார்த்தால் அவர்களின் கண்களுக்கு நன்மை தெரியும்.

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்புக்கு வெள்ளை அறிக்கை கேட்பவர் தான் ஸ்டாலின். சட்டமன்றத்தில் இருக்கும் பொழுது 110விதியின் கீழ் அறிக்கை அறிவிக்கும் போது அவர் மனது ஏற்றுக்கொள்ளாது.அப்படி இருப்பவர் கடல் கடந்து சாதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது பல்வேறு வலைதளங்களில் கூட பாராட்டி வருகின்றனர். இது தமிழ் இனத்திற்கும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் கிடைத்த புதிய அத்தியாயம் ஆகும்.

முதலமைச்சரை உலகம் முழுவதும் பாராட்டி வருகின்ற நிலையில் ஸ்டாலின் முரண்பட்டு கருத்து கூறுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஏனென்றால் உலகத்தமிழர்களின் பாராட்டை முதலமைச்சர் பெற்று விட்டாரே என்ற ஆதங்கத்துடன் பல்வேறு கருத்துக்களை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் இந்த அரசு நிலையான அரசா என்று கேட்டவர்கள் மத்தியில் இது நின்று நிலையான அரசு என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக நலனுக்காக ஆட்சி செய்வது மட்டுமல்லாது, அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நலனுக்காக ஆட்சி செய்ய முடியும் என்பதை சாமானிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நிரூபித்துள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஏன் ஆர்வமுடன் உள்ளார்கள் என்றால் இங்கு தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சாலை வசதி நன்றாக உள்ளது. அரசிடம் உறுதித்தன்மை உள்ளது. தடையில்லா மின்சாரம் உள்ளது. மனித வளம் உள்ளது. ஆகவே உலக முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமுடன் உள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.