தற்போதைய செய்திகள்

ஆற்றுப்பகுதியில் செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்…

தருமபுரி:-

ஒகேனக்கல் காவேரி ஆற்றை பார்க்க செல்லும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

காவேரி கூக்குரல் என்ற நதிகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பயணத்திற்காக தருமபுரிக்கு சத்குரு ஜக்கிவாசுதேவ் வந்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

‘காவேரி கூக்குரல் நதிகள் மீட்போம்’ என்ற சத்குருவின் பயணம் சிறந்த நோக்கத்தோடு நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் மூலம் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் சத்குரு ஏற்படுத்தி வருகிறார்.

ஒகேனக்கல் காவேரியாற்றில் வினாடிக்கு சுமார் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் காவேரியாற்றில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவேரியாற்றில் வரும் தண்ணீரை காண செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் ஆற்றுப்பகுதிகளில் புகைப்படம் எடுத்துக்கொள்வது மற்றும் செல்போன்களில் செல்பி எடுப்பது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஒகேனக்கல்லில் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும், அருவிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.