சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

தன்னிறைவு பெற்ற மாவட்டமாக சேலம் விரைவில் உருவாகும் – முதலமைச்சர் உறுதி

சேலம்

750 ஏக்கரில் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக சேலம் விரைவில் உருவாகும் என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளையொட்டி சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

அம்மாவுடைய அரசு இருக்கின்ற காரணத்தினால் தான் தொழில் வளம் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இன்றைக்கு புதிய புதிய தொழிற்சாலைகள் வந்து கொண்டு இருக்கின்றன. அம்மா அவர்கள் 2015-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினார். புதிய புதிய தொழிற்சாலைகள் மற்றும் திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தது.

அம்மா வழியில் செயல்படும் அரசு 2019-ல் ஜனவரி மாதம் சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து 304 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த அரசு அம்மாவுடைய அரசு. அண்மையில் ஃபோர்டு தொழிற்சாலையை துவக்கி வைத்து வந்தேன். 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். டி.எல்.எப். திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வந்தேன். சியட் கம்பெனி முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள். மொத்தம் 4 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை கொண்டது. இதன்மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் வருகின்ற போது, நான் அந்த தொழில் அதிபர்களுடன் கேட்டுக் கொள்வது, தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். அவர்களும் முன்னுரிமை கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். தூத்துக்குடி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம், சுமார் 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம், 2 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம்.

தமிழ்நாட்டில் புதிய புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் அருகில் ராணுவ தளவாடங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வேண்டும் என்று கேட்டேன். அப்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் சேலத்தில் ராணுவ தளவாடங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆகவே அந்த தொழிற்சாலையும் விரைவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சுமார் 750 ஏக்கர் ஜவுளிப் பூங்கா சேலம் நகரத்திற்கு அருகிலே வருவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக் கின்றேன். அந்த கோரிக்கையும் மத்திய அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது. இன்றைக்கு சேலம் மாவட்டம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாகும்.

பிரம்மாண்டமான 8 வழி சாலை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்க நான் முயற்சி செய்தேன். ஆனால் வேண்டுமென்றே எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து அந்த திட்டத்தை இன்றைக்கு முடக்கி வைத்திருக்கிறார்கள். அதை எக்ஸ்பிரஸ் வே-ஆக மாற்றி விட்டது. அதுவும் வருவதற்கு நாங்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.