சிறப்பு செய்திகள்

வெளிநாடு சென்று வெற்றியுடன் திரும்பிய முதலமைச்சருக்கு தலைவர்கள் வாழ்த்து…

சென்னை:-

வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை ஈர்த்து தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியுடன் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்று ரூ.8300 கோடி அளவுக்கு தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வெற்றியுடன் தமிழகம் திரும்பிய முதலமைச்சருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சரை வெகுவாக பாராட்டினார். தங்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் வெற்றி பயணமாக அமைந்திருந்தது. பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் உருவாக்குவதற்கு தங்களின் அரசுமுறை பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதற்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இதேபோல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் தொழில்வளம் பெருக அவர் மேற்கொண்ட முயற்சிகள் பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், முதலமைச்சர் தமது சுற்றுப்பயணத்தை பயனுள்ளதாக்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெளிநாடு சுற்றுப்பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சிலர் விமர்சனம் செய்வது முறையல்ல. முதலமைச்சரின் இந்த அரிய சாதனையை தமிழக மக்கள் சார்பிலும், தே.மு.தி.க. சார்பிலும் வாழ்த்தி பாராட்டுகிறேன் என்று கூறினார்.

இதேபோல் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சேலத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கழக கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.