கடலூர்

முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியது வீராணம் ஏரி

கடலூர்:-

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள வீராணம் ஏரிக்கு கல்லணையில் இருந்து அணைக்கரை கீழணை மற்றும் வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. தற்போது ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 46 கன அடி வீதம் தண்ணீர் வருவதால், மொத்த நீர்மட்டமான 47 புள்ளி 50 அடியில், 47 புள்ளி 2 அடியை எட்டி உள்ளது. இதனால் ஏரி நிரம்பி பரந்து விரிந்து கடல் போல் காட்சி அளிக்கிறது

பாசனத்துக்காக ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் சிதம்பரம் பகுதியில் சுமார் 108 கிராமங்களில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 51 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.