தமிழகம்

தமிழக ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

2020-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கு, தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள மாநில ஹஜ் கமிட்டிக்கு 6,028 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் ஏழு குழந்தைகளும் அடங்கும். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 3,736 இடங்களை தான் இந்திய ஹஜ் கமிட்டி ஒதுக்கீடு செய்துள்ளது. மற்ற பயணிகளும் தங்கள் விண்ணப்பங்கள் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

எனவே தமிழ்நாடு ஹஜ் கமிட்டி பரிந்துரைத்த 6,028 பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும். மத்திய அரசின் ஒதுக்கீட்டை பயன்படுத்தாமல் உள்ள மற்ற மாநிலங்களின் இடங்களை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கித் தர வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.