தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விரைவில் சிறுசேமிப்பு கணக்கு – அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு…

ஈரோடு:-

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விரைவில் சிறுசேமிப்பு கணக்கு தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மல்லிகை அரங்கில் மத்திய கூட்டுறவு வங்கி 38 மற்றும் 39-வது பேரவை கூட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது. சட்ட மன்ற அவைக் குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ, அந்தியூர் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராஜா கிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக பல்வேறு கடனுதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் 2013-ம் ஆண்டில் நிர்வாக குழு பொறுப்பேற்ற பொழுது ரூ.1038 கோடியாக இருந்த வைப்பு தொகை ரூ.862 கோடி உயர்ந்து ரூ.1900 கோடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது பயிர்கடன் வழங்குவதில் சதவீத அடிப்படையில் தமிழ்நாட்டிலேயே அதிகளவில் பயிர்கடன் வழங்கியுள்ளது. மேலும் பயிர்கடன் அல்லாத மற்ற விவசாயம் சார்ந்த மத்திய காலக்கடன்களை மாநிலத்திலேயே அதிகளவில் வழங்கி வருகிறது. கறவை இனங்களுக்கு மத்திய கால கடன் வழங்கியதன் மூலம் 2017-18-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 2.92 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தியானது தற்பொழுது 3.4 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகரிப்பதற்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த நிதியாண்டில் பயிர்கடன் வழங்க ரூ.800 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டில் செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்ப்பதற்கு 1210 நபர்களுக்கு ரூ.10.39 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் எய்திட ஏதுவாக 7223 நபர்களுக்கு கறவை இனங்கள் மற்றும் செம்மறி ஆடுகள் வாங்கிட நபார்டு வங்கியின் மூலம் மானியம் பெறப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

தனிநபர் தானிய ஈட்டு கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் பனையம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் புதியதாக தொடங்கப்பட்டு, தற்பொழுது 228 சங்கங்களாக செயல்பட்டு வருகிறது. அரசு மற்றும் பொது நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பள அடிப்படையில் ரூ.7 லட்சம் வரை 10.5 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் சூரிய ஒளி மின் கருவி அமைக்கப்படவுள்ளது. மாணவ, மாணவிகளிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்திடும் வகையில் சிறு சேமிப்பு கணக்கு துவங்கப்படவுள்ளது.

மேலும் வங்கியின் மூலம் புதிய ஏடிஎம் கார்டுகள் வழங்குதல், புதிய ஏடிஎம் மையங்கள், புதிய சுய உதவிகுழுக்கள், கிளைகள் நவீனமயமாக்குதல் போன்ற பல்வேறு வகையான வளர்ச்சிகளை நோக்கி மத்திய கூட்டுறவு வங்கியானது மேம்படுத்தப்படவுள்ளது. புதிய ஈரோடு மாவட்டத்தில் பயிர்கடன் 99.75 சதவீதமும், இதர கடன்கள் 96.05 சதவீதமும் முறையாக திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கியானது 2018-19-ம் ஆண்டில் மொத்தமாக ரூ.25.57 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நீராதாரங்களை மேம்படுத்திடும் வகையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், மழைநீரை சேகரிக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணியை விவசாய பெருமக்களுடன் இணைந்து சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழை காலங்களில் மழை நீர் நீர்நிலைகளை சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர் உயர வருகிறது. மேலும் வறட்சி பகுதியில் வாழும் மக்களின் நலன் கருதி ஆறுகளில் உள்ள உபரிநீரினை கொண்டு ஏரி, குளங்களை நிரப்பும் திட்டப்பணியானது விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இவ்வாறு அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

முன்னதாக பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் ஆண்டறிக்கை மலரினை வெளியிட்டும், மேலும் பணியின்போது மரணமடைந்த 3 கூட்டுறவு சங்க பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணியாளர் குடும்ப நல காப்பீட்டு திட்டத்தின் மூலம் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.6 லட்சத்திற்கான வரைவோலைகளை வழங்கினார்.