திருவண்ணாமலை

மகா தீப தரிசனத்திற்கு பிறகு 21-ந் தேதி முதல் மலையேற தடை

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப் பட்டது. கடந்த 10-ந் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை காட்சி அளிக்கும்.
தீபத் திருவிழாவின் போது திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் தற்போது திருவண்ணா மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.மேலும் சில பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று மகா தீபத்தையும் தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் உள்ள மலை மீது மக்கள் ஏற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த சமயத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 2,500 பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது. மகா தீபம் வருகிற 20-ந் தேதி வரை ஏற்றப்படும். மகா தீபத்தை காண தற்போது பக்தர்கள் தொடர்ந்து மலை ஏறி வருகின்றனர். அதனால் மகா தீபம் காட்சி தரும் வரை மக்கள் மலையேற தடை தளர்த்தப்பட்டு உள்ளது.
பின்னர் வருகிற 21-ந் தேதி முதல் மீண்டும் வழக்கம்போல் மலையேற தடை உத்தரவு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். அதன் பின்னர் மலையேறுவோர் மீது வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.