சிறப்பு செய்திகள்

தி.மு.க. 5 முறை ஆட்சியில் இருந்தபோது மழை நீர் வீணாவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?ஸ்டாலினுக்கு முதலமைச்சர் காட்டமான கேள்வி.

கோவை:-

தி.மு.க. 5 முறை ஆட்சியில் இருந்தபோது மழைநீர் வீணாவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று வக்கணை அரசியல் பேசும் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் இஸ்ரேல் சென்று அங்கிருக்கின்ற நீர் ஆதாரத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்ற ஒரு விரிவான ஆலோசனையை மேற்கொள்வதற்காக செல்வேன் என்று சொன்னார். அதற்கு ஒரு கிண்டல் செய்து இன்று பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். இங்கிருக்கும் உபரிநீரையே நீங்கள் சேமிக்க வேண்டும் என்று சொல்கிறார். இவர்களுடைய ஆட்சிக்காலத்தில் இவருடைய தந்தை 5 முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார், காவேரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் வரை பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் உபரியாக சென்று கடலில் கலக்கிறதே, எத்தனை தடுப்பணை நீங்கள் கட்டியிருக்கிறீர்கள்? எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பேசுவதற்கு என்ன அருகதை, தகுதி இருக்கிறது ?

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொள்ளிடத்தில் ஒரு தடுப்பணை கட்டவேண்டும் என்று அறிவித்தார். நான் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, டெண்டர் விட்டு, அந்தப் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஸ்டாலின் தெரிந்து பேசவேண்டும்.

புகழூர் காகித ஆலையின் அருகில் காவேரி ஆற்றின் குறுக்கே தண்ணீரை தேக்குவதற்கு எங்களுடைய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து பணி துவங்கப்படும். அதுமட்டுமல்லாமல், காவேரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் வரை செல்கின்ற அளவிற்கு மேலும் 3 தடுப்பணை கட்டுவதற்கும் ஆய்வுப்பணி மேற்கொண்டிருக்கிறோம்.

எனவே, நான் பொறுப்பேற்று இந்த குறுகிய காலத்தில் உபரியாக வெளியேற்றுகின்ற நீரை ஆங்காங்கே தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர் உயர்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எத்தனை முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்தார், நீங்கள் துணை முதலமைச்சராக இருந்தீர்கள், காவேரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் வரை எத்தனை தடுப்பணை கட்டியிருக்கிறீர்கள்? விவசாயத்திற்கு என்ன செய்தார் என்று சொல்கிறார்? நான் இதையெல்லாம் செய்திருக்கிறேன், புள்ளிவிவரத்தோடும், ஆதாரத்தோடும் சொல்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், நீர் மேலாண்மையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற 2 தலைமைப் பொறியாளர்கள், 3 கண்காணிப்பு பொறியாளர்களை நியமித்து அவர்கள் ஒன்றேகால் ஆண்டுகாலமாக ஆய்வு செய்து, எங்கெங்கெல்லாம் உபரியாக தண்ணீர் வெளியேறி கடலில் கலக்கிறதோ என்பதை கண்டறிந்து அங்கே தடுப்பணை கட்டவேண்டுமென்று அரசினுடைய கவனத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதனடிப்படையில் தான் அம்மாவினுடைய அரசு, சட்டமன்றத்தில், ரூபாய் 1000 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து, இப்பொழுது ரூபாய் 600 கோடிக்கு தடுப்பணை கட்டுகின்ற பணியை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரிவதற்கு வாய்ப்பேயில்லை.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.