தற்போதைய செய்திகள்

அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் 500 பேருக்கு பட்டம் – மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

மதுரை:-

மதுரை கோ.புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டு அரசு ஆண்கள், பெண்கள், செக்காணூரனி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை சேர்ந்த 500 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மதுரை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மதுரை, மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் செக்காணூரனி ஆகிய மூன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்படுகின்றன. மதுரை கோ.புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 1961-ல் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 1657 மாணவர்களும், 220 மாணவிகளும் பயிற்சி பெறுகின்றனர். இந்த தொழில்பயிற்சி நிலையங்களின் மூலம் 31 தொழிற் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் சுமார் 1,170 மாணவ, மாணவிகள் பயிற்சி முடித்து செல்கின்றனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் விலையில்லா மடிகணினிகள், விலையில்லா மதிவண்டிகள், இலவச புத்தகங்கள், சீருடைகள், காலனிகள், வரைபடக் கருவிகள், இலவச பேருந்து பயண அட்டை மற்றும் இடைநிற்றல் கல்வியை தடுக்க ரூ.500 மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் COMPUTER NUMERIC CONTROL MACHINE மூலம் புரோகிராமிங் செய்யவும், ஆட்டோ மொபைல் பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு மையம் மூலம் பயிற்சியும், SMART CLASS ROOM வழியாக ஆங்கில பயிற்சி மற்றும் கணினி பயிற்சியும் மாணவர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது. மேலும் கைபந்து, கூடைபந்து, பூப்பந்து, உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் ஓட்டப்பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியாளர்களுக்கு PLACEMENT CELL மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. ITI மாணவர்களுக்கு தமிழில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பினை பெற DUAL SYSTEM OF TRAINING 23 நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆய்வு செய்ததில் “தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது”. அகில இந்திய அளவில் மூன்று நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ள 123 தொழில் பயிற்சி நிலையங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 13 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. இந்திய அளவில் முதல் 10 இடத்தை பெற்ற பயிற்சி நிலையங்களில், தமிழ்நாட்டை சேர்ந்த 8 பயிற்சி நிலையங்கள் (5 அரசு, 3 தனியார்) இடம் பெற்றுள்ளன.

திறன் பயிற்சி வழங்குவதில், இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய தொழில் சான்று பெற்றவர்களுக்கு உலகமெங்கும் பணியாற்ற அங்கீகாரமாக உள்ளது. இதனால் பெருமளவில் அந்நிய செலாவணி கிடைக்கிறது. இப்பயிற்சி நிலையங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெருகுகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் 80,41,102 நபர்களுக்கு திறன்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் திறன் பயிற்சிக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, மண்டல பயிற்சி இணை இயக்குநர் எஸ்.ரவிபாஸ்கர், மதுரை துணை இயக்குநர் ஜெ.அமலா ரெக்சலீன், மதுரை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், கூட்டுறவு நுகர்வோர் சங்க தலைவர் ராஜா, உதவி இயக்குநர் கே.பாலமுருகன் அவர்கள், செக்காணூரனி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எல்.தர்மராஜ், மதுரை மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வசந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.