தற்போதைய செய்திகள்

பேரிடர் மேலாண்மை பயிற்சி ஒத்திகை பலம்,பலவீனத்தை கண்டறிய உதவும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி…

சென்னை:-

பேரிடர் மேலாண்மை பயிற்சி ஒத்திகை பலம், பலவீனத்தை கண்டறிய உதவும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

வருடாந்திர பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண பயிற்சி தொடர்பான கண்காட்சி சென்னை தீவுத்திடலில் நேற்று நடைபெற்றது. இதனை பார்வையிட்ட பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பேரிடர் தொடர்பான பணிகளில் ஈடுபடும் முப்படைகள் மற்றும் மாவட்ட நிருவாகங்கள், ஒருங்கிணைந்து வருடாந்திர பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண பயிற்சியினை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் (காஞ்சிபுரம் மாவட்டம் தவிர்த்து) புயல் மற்றும் நகர்ப்புற வெள்ளம் குறித்து வருடாந்திர பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண பயிற்சி நடத்துகிறது. புயல் மற்றும் நகர்ப்புற வெள்ளம் குறித்த கருத்துப்பட்டறை நடத்தப்பட்டது. இதில்முப்படைகள், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை, தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்கள் மற்றும் இதர நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கருத்துப்பட்டறையில், கூடுதல் தலைமைச்செயலர், வருவாய் நிருவாக ஆணையர் உட்பட பேரிடர் மேலாண்மையில் நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பு பேச்சாளர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்தளித்தது இக்கருத்துப் பட்டறைக்கு வந்திருந்த பங்கேற்பாளர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஒத்திகைக்கான அலுவல் வழி உத்தேச பயிற்சியில் , புயல் மற்றும் நகர்ப்புறங்களில் வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி, இந்திய கடற்படை மற்றும்,தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் ஒருங்கிணைந்து, தீவுத்திடலில் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதில், முப்படைகள், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, இதர தொடர்புடைய துறைகளின் சார்பில், தேடல், மீட்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது.  மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண பயிற்சி-2019-ன் ஒரு பகுதியாக சென்னை துறைமுக கழகத்தில், இந்திய கடற்படையினரால் திறன் மேம்பாடு ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது.

பேரிடர்களை கையாளும் அரசு அலுவலர்கள் மற்றும் இதர பங்கேற்பாளர்களது திறன்களை மேம்படுத்தும் வகையில் கடலோர மாவட்டங்களில் (காஞ்சிபுரம் மாவட்டம் தவிர்த்து) சென்னையில் மைலாப்பூர், சீனிவாசபுரம், கடலூரில் சிதம்பரம் , கிள்ளை வடக்கு, கன்னியாகுமரியில், கல்குளம், சின்னவிளை, நாகப்பட்டினத்தில்,சீர்காழி , வானகிரி, புதுக்கோட்டையில் , மனமேல்குடி ,கோட்டைபட்டினம், ராமநாதபுரத்தில் , திருவாடனை ,தொண்டி, தஞ்சாவூரில், பேராவூரணி , காரண்குடா, தூத்துக்குடியில் திருச்செந்தூர்,

கொம்புதுரை,திருநெல்வேலியில் , திசையன்விளை, கூடுதாழை, திருவள்ளூரில் , பொன்னேரி, பழவேற்காடு, திருவாரூரில், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம் , விழுப்புரத்தில் , மரக்காணம் , எக்கியர்குப்பம் ஆகிய கிராமங்களில்ஒத்திகைப் பயிற்சி நடைபெறுகிறது. இந்த ஒத்திகைப் பயிற்சியில், புயல் தொடர்பான எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றது. இந்த எச்சரிக்கைத் தகவல்களின் அடிப்படையில், கடலோர மாவட்ட நிருவாகங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளான தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் படை, பல்துறை மண்டலக் குழுக்கள் ஆகியவற்றை ஆயத்த நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.

மேலும், பேரிடர்களின் போது தயார் நிலையில் இருக்கும் வகையில், முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் பேரிடர் உதவிப்படையினைச் சார்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றின் தொடர் சேவையினை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஒத்திகைப் பயிற்சியானது, பொதுமக்கள் மற்றும் முதல்நிலை மீட்பாளர்கள், பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான திறன்களை வளர்க்கும். மாநில மற்றும் ஒத்திகைப் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களின் பேரிடர் மேலாண்மை திட்டங்களின் செயல்திறனை மறு ஆய்வு செய்வதில் பெரிதும் உதவுகிறது.

பேரிடர்களை எதிர்கொள்ளும் மாநிலத்தின் தயார் நிலையினை ஆய்வு செய்யவும், சிறந்த நடைமுறைகள் மற்றும் பலவீனங்களை கண்டறியவும், ஆதாரங்கள், அமைப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை அறியவும் இந்த ஒத்திகைப் பயிற்சி உதவியாக அமையும். கடந்த கஜா புயலின் போது தமிழக அரசு முதல்வரின் வழிகாட்டுதலின்படி மிக துரிமாக செயல்பட்டது. அனைவருக்கும் தெரியும்.அரசு இரவு பகல் பாராமல் உழைத்து அனைத்து தரப்பு மக்களின் பாராட்டை பெற்றது. கஜா புயலின்போது நாம் ஒரு மீனவரைக்கூட இழக்கவில்லை. இது அரசின் மிகப்பெரிய சாதனையாகும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.