தற்போதைய செய்திகள்

ஆரணியில் ரூ.2.50 கோடியில் புதிய காய்கறி அங்காடி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி சார்பில் ரூ.2.50 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட 144 காய்கறி அங்காடியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள காய்கறி மார்க்கெட் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கடைகளாகும் காய்கறி மார்க்கெட்டில் 144 கடைகள் இருந்தன கடந்த ஆண்டு தொடர்மழை பெய்தபோது மிகவும் பழமையான கட்டடம் என்பதால் சில கடைகள் இடிந்து விழுந்தது.

இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை பின்னர் காய்கறி அங்காடியினர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனை அணுகி மார்க்கெட் இடிந்து விழுகிறது. ஆகையால் புதியதாக கடைகள் கட்டித்தாருங்கள், புதியதாக கட்டப்படும் கடைகள் எங்களுக்கே வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று புதிய கடைகள் கட்ட ஆணையை அமைச்சர் பெற்றுத்தந்தார்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வடிவமைப்பு கட்டுமானம் நிதி இயக்குதல் மற்றும் பராமரிப்பு அடிப்படையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட காய்கறி அங்காடியில் 144 கடைகள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு காய்கறி கடைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை தாங்கினார். செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், ஆரணி கோட்டாட்சியர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்திருந்த அனைவரையும் நகராட்சி மண்டல இயக்குநர் சி.விஜயகுமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர கழக செயலாளர் எ.அசோக்குமார், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடி திருமால், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதிலிங்கம், மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் ரமணி நீலமேகம், பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சம்பத், காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் சாதிக்பாஷா, நிர்வாகிகள் சுபானிபாய், மோகன், சங்கர்கணேஷ், ஆறுமுகமுதலியார், அன்சர்பாஷா, நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார், நகராட்சி பொறியாளர் ரெ.கணேசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.