காஞ்சிபுரம்

வரும் அனைத்து தேர்தல்களிலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா உறுதி

காஞ்சிபுரம்:-

முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் தமிழகம் வளர்ச்சி பாதையில் பீடுநடை போட்டு வருவதால் வரும் அனைத்து தேர்தல்களிலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா கூறினார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் காஞ்சிபுரம் நகரக் கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காஞ்சிபுரம் நகரக் கழகச் செயலாளர் என்.பி.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார். கழக அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் வரவேற்புரையாற்றினர். கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா, தலைமைக் கழகப் பேச்சாளர் சிட்கோ சீனு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா பேசியதாவது:-

சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் மிகவும் வலிமை வாய்ந்த கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசை விரட்டியடித்த பெருமை இம்மண்ணில் பிறந்த பேரறிஞர் அண்ணாவை சாரும். அதே போல் ஊழல் கட்சியான தி.மு.க.வை விரட்டியடித்த பெருமை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும். இதயதெய்வம் அம்மா அவர்களையும் சாரும். கழகத்தை வழிநடத்தும் இரும்பெரும் தலைவர்கள் கூடிய விரைவில் தி.மு.கவை காணாமல் செய்வார்கள். முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் தமிழகம் வளர்ச்சி பாதையில் பீடுநடை போடுகிறது.

இதயதெய்வம் அம்மாவிற்கு தி.மு.க.வினர் எண்ணற்ற சோதனைகள் கொடுத்தனர். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு பீனிக்ஸ் பறவை போல் அனைத்திலும் வெற்றி அடைந்தார். அம்மாவின் பிறந்தநாளை “ மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினமாக” அறிவித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நாம் நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

இதயதெய்வம் அம்மா அவர்கள் தனக்குபின்பும் கழகம் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரியும் என்றார். அவரது எண்ணம் நிறைவேறியுள்ளது. அதற்கு உதாரணமாகத்தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை நாம் கூறலாம். அதோடு அடுத்து வரவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் நாம் மாபெரும் வெற்றியினை பெறுவோம் இது உறுதி.

இவ்வாறு கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா பேசினார்.