பெரம்பலூர்

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது – தாமரை எஸ்.ராஜேந்திரன் & ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேச்சு

பெரம்பலூர்

பொய் வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி வரும் ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என்று அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூறினர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி ஏற்பாட்டில் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், கழக தொண்டர்களுக்கு வேட்டிகள்,சைக்கிள்கள், மின்விசிறிகள், சலவை தொழிலாளிகளுக்கு அயன்பாக்ஸ்கள், இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட், வாலிபால், கால்பந்து உள்பட 1400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மக்களுக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். நமது இயக்கத்தில் குடும்ப அரசியல் கிடையாது. ஏழை எளியவர்களுக்காகவே பல்வேறு திட்டங்களை பார்த்து பார்த்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் செய்தனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா நிறைவேற்றியுள்ளார்.

2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிலம் இல்லா ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருகிறோம் என பொய்யான வாக்குறுதி களை சொல்லி ஓட்டு வாங்கி நாட்டு மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி. அதே போல் ஸ்டாலினும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கல்விக்கடன், விவசாய கடன், வங்கிகளில் அடகு வைத்த நகைகளை திருப்பி தருகிறோம் என பொய்யான வாக்குறுதி சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றினார்.

ஸ்டாலின் ஒரு நாளும் முதலமைச்சராக வரவே முடியாது. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் பேசினார்.

பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாளில் கழக தொண்டர்கள் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்களை வாரி வழங்குவார்கள். ஆனால் தி.மு.கவினர் பிறந்த நாள் கொண்டாடினால் பெரிய அண்டாவை வைத்து தொண்டர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து விடுவார்கள்.

பெண்களுக்காகவே வாழ்ந்து பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அதனால் தான் அம்மாவின் பிறந்த நாள் பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள். ஆனால் தன் நயவஞ்சகத்தால் முதலமைச்சரானவர் கருணாநிதி. அண்ணாவிற்கு பிறகு தி.மு.க வை தன் குடும்ப அரசியலாக மாற்றி விட்டார்.

பெரம்பலூர் பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தீர்களே அவரை ஒரு நாளாவது பார்க்க முடிகிறதா, தி.மு.க ஆட்சி காலத்தில் அராஜகம் தான் நடந்தது. தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா என் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினார். தி.மு.க ஆட்சியில் இருந்தவர்கள் ஜெயிலுக்கு போனவர்களாக தான் இருக்கிறார்கள். இப்ப கூட மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தி.மு.க.வை வழி நடத்த பல கோடி பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். தொண்டர்களின் அரவணைப்பு இல்லாமல் கட்சி நடத்தும் ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது

.
இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் பேசினார்