தற்போதைய செய்திகள்

ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க இலவச வர்த்தக ஒப்பந்தம் – தேசிய வர்த்தக கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் வலியுறுத்தல்……

சென்னை:-

ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க இலவச வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும். என்று தேசிய வர்த்தக வாரியத்தின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தேசிய வர்த்தக வாரியத்தின் உயர் மட்ட வாரிய கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்றார்.

கூட்டம் முடிந்தமு் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

2020-ம் ஆண்டோடு சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 39 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. அவற்றுக்கு கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு சலுகை நீட்டிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம்.

அதேபோல மோட்டார் வாகன உற்பத்தி 25 சதவீதம் குறைந்து விட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உள்நாட்டு விற்பனை, மாநில விற்பனை குறைந்துள்ளது. இந்த காரணங்களுக்காக ஏற்றுமதி சலுகைகளை அளிக்கவேண்டும் என்று கோரியிருக்கிறோம்.

ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஜவுளி ஏற்றுமதியிலும் முதலில் இருக்கிறோம். நமக்கு போட்டியாக வியட்நாம், கம்போடியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் இருக்கின்றன. கடுமையான போட்டியை சமாளிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

கடந்த கால கூட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஒரு பொருளை மட்டுமே உற்பத்தி செய்யும் நிலையை மாற்றி பல பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கவேண்டும் என்று கடந்த கூட்டத்தில் கேட்டிருந்தோம். அந்தக் கோரிக்கையையும் தற்போது மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.