தமிழகம்

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பண்டிகை முன்பணம் – அரசாணை வெளியீடு…

சென்னை:-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிகள் நிர்வகிக்கும் பள்ளிகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும்ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், தகுதியான ஊழியர்கள் அனைவரும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், பக்ரீத் ஆகிய பண்டிகைகளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக அவர்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்கப்படுகிறது.

இந்த தொகை அடுத்த 10 மாதங்களில் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். கடந்த 2012-ம் ஆண்டு வரை, பண்டிகை முன்பணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. அதே ஆண்டு நவம்பரில் இந்த தொகை, ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை 20-ந்தேதி சட்டப்பேரவையில், நிதித்துறை மானிய கோரிக்கைகள் மீது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், பண்டிகை முன்பணத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்துவதற்கான அரசாணையை நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். மேலும் முன்பணம் ஒதுக்குதல், அதை திரும்ப பெறுவதற்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைகள் தொடரும் என்றும், அடுத்து வரும் பண்டிகைகளுக்கு இந்த சலுகையை பயன்படுத்தும் வகையில் உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.