தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை மக்கள் துணையுடன் முறியடிப்போம் – அமைச்சர் பா.பென்ஜமின் முழக்கம்

திருவள்ளூர்:-

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை மக்கள் துணையுடன் முறியடிப்போம் என்று அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மதுராவயல் பகுதி கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் ஊரக தொழிற்துறை அமைச்சரும், மதுரவாயல் பகுதி கழக செயலாளருமான பா.பென்ஜமின் தலைமையில் மதுரவாயல் அனுரெட்டி கார்டன் பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.பி முத்துமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இயக்கம், புரட்சித்தலைவி அம்மா கட்டிக் காத்த இயக்கம். அந்த வழியில் வந்த நாங்கள் உண்மையை சொல்வோம், சொல்வதை செய்வோம். எத்தகைய சூழ்நிலையிலும் நாங்கள் மாற மாட்டோம். அதுதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்பதை பல கால கட்டத்தில் நிரூபித்து காட்டியிருக்கிறோம். தி.மு.க போல் சொல்வது ஒன்று, நடப்பது வேறு அல்ல. சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பது அண்ணா தி.மு.க. அரசு.

வேண்டுமென்றே திட்டமிட்டு நாட்டில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் போடும் சதித்திட்டத்தை மக்கள் துணையோடு முறியடிப்போம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மை மக்களுக்காக ஏராளமான திட்டங்களை அம்மா வழங்கி இருக்கிறார். கழக அரசு சிறுபான்மை மக்களுக்கு நலன் செய்யும் அரசாக பல்வேறு திட்டங்களை அறிவித்து கொண்டு இருக்கிறது. ஆகவே, சிறுபான்மை மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எங்களுக்கு வரும் பிரச்சினையாக கருதி அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். என்றுமே சிறுபான்மை மக்களின் அரணாக கழக அரசு இருக்கும்.

இன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருந்தாலும், இன்றைக்கு சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் முதல் மாநிலம் என்று இந்தியா டுடே என்ற ஆங்கில நாளேடு தொடர்ந்து இரண்டு முறை விருதை கொடுத்திருக்கிறது.

அப்படி அமைதியாக வாழுகின்ற மாநிலத்தில் வேண்டுமென்ற திட்டமிட்டு, தூண்டுதலின் பேரில் அவதூறான செய்திகளை பரப்பி, சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எந்த வகையிலும், அம்மாவுடைய அரசு அதற்கு துணை நிற்காது. தமிழகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழரும், சிறுபான்மை மக்களாக இருந்தாலும், வேறு மக்களாக இருந்தாலும் சரி, அத்தனை பேரையும் பாதுகாக்கின்ற அரசு அம்மாவுடைய அரசு.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இந்த கூட்டத்தில், கா.சு.ஜானர்த்தனம், புலவர் ரோஜா, வழக்கறிஞர் சூரிநாரயணன், ராஜா (எ) பேரழகன், அருள்யுகா, கபாலி, வட்ட செயலாளர்கள் தென்றல்குமார், பாரத், சத்தியநாதன், சந்திரசேகர், தாமோதரன், கோபு, மற்றும் தங்கம் ராஜேந்திரன், பிரிஸ்கில்லா தேவதாஸ், தமிழரசி, வளசை மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 147 வது வட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான மதுரவாயல் ஏ.தேவதாஸ் நன்றி கூறினார்.