சிறப்பு செய்திகள்

இஸ்லாமியர்களிடம் தவறான தகவல்களை பரப்பி தி.மு.க. அச்சத்தை ஏற்படுத்துகிறது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை

இஸ்லாமியர்களிடம் தவறான தகவலை பரப்பி தி.மு.க. அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா அவர்கள் இருக்கும்போது எப்படி கொண்டாடப்பட்டதோ அதேபோல தான் இன்றும் தமிழகம் முழுவதும் ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அம்மா அவர்கள் தமிழக மக்களுக்காக என்னென்ன திட்டங்களை தர வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான முறையில் ஆட்சி செய்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். இதனால் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ந் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார். காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்பு போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆனால் எதை செய்தாலும், எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தால் இஸ்லாமியர்கள் சிறிதளவும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதுதொடர்பாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இஸ்லாமியர்கள் மத்தியில் திமுக அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இஸ்லாமிய மக்களிடையே திமுகவினர் தவறான பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர்.

இன்றைக்கு கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இவை எதுவும் தமிழகத்தில் கிடையாது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. சட்டம்-ஒழுங்கு நன்றாக உள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் எப்படி இருந்தது என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார். அதற்காக மு.க.ஸ்டாலின் போராட்டம், ஆர்ப்பாட்டம் என அரசியல் நாடகம் நடத்துகிறார். பொய்யான பிரச்சாரங்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைக்கிறார். மு.க.ஸ்டாலின் கனவு என்றைக்குமே பலிக்காது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

அதனைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளன்று கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 13 ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், 6 பெண் குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள்
அம்மன் கே.அர்ச்சுணன்,வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்ராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மாவட்ட கழக துணை செயலாளர் கேபி.ராஜூ, மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட கழக செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.