சிறப்பு செய்திகள்

விவசாயிகளை கொச்சைப்படுத்த வேண்டாம் – முதலமைச்சர் வேண்டுகோள்

தஞ்சை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தஞ்சாவூரில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் இல்லத் திருமண விழாவில் ஆற்றிய உரை வருமாறு:-

ஒரு விவசாயி தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், விவசாயக் குடும்பத்திலே பிறந்து, வளர்ந்து, உச்சநிலையை அடைந்தவருடைய மகனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்கு இறைவன் கொடுத்த பாக்கியத்தை எண்ணி நான் பெருமையடைகிறேன். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அப்படி ஒரு சந்தர்ப்பம், எனக்கு உங்களால் முதலமைச்சர் என்ற பதவி கிடைத்திருக்கிறது.

எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு எப்பொழுதும் என்னுடைய எண்ணம் தான் வந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் பத்திரிகையில், நாம் விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமில்லை, அவரே நமக்கு விளம்பரப்படுத்துகிறார், பேசாத நாளே கிடையாது. அதுவும், விவசாயி என்றால் அவருக்கு என்ன எரிச்சல் என்றே தெரியவில்லை.

நான் விவசாயி என்று சொன்னால், நீ விவசாயி இல்லை என்கிறார். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நான் பிறந்து வளர்ந்தது கிராமத்திலே, எனது குடும்பம் விவசாய குடும்பம், அதை விவசாயி என்று தானே சொல்ல முடியும். வேறு என்ன சொல்ல முடியும்? இங்கே வந்திருக்கின்றவர்கள் அனைவரும் விவசாயிகள், உங்களுடைய முகத்திலே முகமலர்ச்சியைப் பார்க்கின்றோம்.

விவசாயி என்று சொன்னாலே பெருமை. அடுத்தவரிடத்திலே கைகட்டி பிழைக்கின்ற கூட்டம் விவசாயிக் கூட்டம் இல்லை என்பதை தங்கள் உழைப்பால் நிரூபிக்கின்றவர் விவசாயி தான். மற்றவர்களெல்லாம், மற்றவர்களை நம்பி வாழக்கூடியவர்கள், விவசாயி தான், தன் சொந்தக் காலிலே நிற்கின்றார். அப்படி சொந்தக்காலிலே நின்று வாழ்கின்றவரை, நீங்கள் எதிர்த்துப் போராடி வெல்ல முடியாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, விவசாயி உழைப்பதற்காகப் பிறந்தவர். மற்றவர்களுக்காக உழைத்து, உணவளிப்பதற்காகப் பிறந்தவர். இரவு, பகல் பாராமல், வெயில், மழையை பொருட்படுத்தாமல் உழைக்கின்ற விவசாயியை தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம். பச்சைத்துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகளா? என்றும் சொல்கிறார். பச்சைத் துண்டு போடுவதற்கே தகுதி வேண்டும், அந்தத் தகுதி விவசாயிக்கு இருக்கிறது.

மணமகன் டாக்டர் வை.ஆனந்தபிரபு, மணமகள் டாக்டர் த.ஞானரூபினி இருவருமே மருத்துவர்கள். மக்களுக்குச் சேவை செய்வதற்காக இறைவன் படைத்திருக்கின்றார் என்று கருதுகிறேன். எவ்வளவோ பதவி வரலாம், ஆனால், மருத்துவர் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒருவர் உயிரைக் காக்கக்கூடியது மருத்துவத்துறை தான்.

அப்படி அந்த மருத்துவத்துறையிலே இரண்டு பேரும் இன்றைக்கு பட்டம் பெற்று இன்றைக்கு மருத்துவர்களாக இருந்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களை வாழ வைக்கக்கூடிய பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவருடைய வாழ்வு சிறக்க இறைவனை நான் வேண்டி, அவர்கள் பல்லாண்டு, பல்லாண்டு எல்லா வளங்களும் பெற்று மணமக்கள் வாழ வேண்டுமென்று உங்களோடு நானும் வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.