தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலின் தனது சுய லாபத்துக்காக சிறுபான்மை மக்களை பலிகடா ஆக்குகிறார் – வி.வி.ராஜன் செல்லப்பா பேச்சு

மதுரை

சிறுபான்மை இன மக்களை தன் சுயலாபத்திற்காக பலிகடா ஆக்கி வருகிறார் ஸ்டாலின் என்று மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. மாவட்ட இளைஞர், இளம்பெண் பாசறை இணை செயலாளர் ராஜ்குமார் தலைமையில் 100 பேர் அக்கட்சியில் விலகி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது:-

நிர்வாகத்தில் பெரிய புரட்சி செய்து தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து விவசாயிகளின் பாதுகாவலராக திகழ்ந்து வருகிறார்.

சிறுபான்மையின மக்கள் ஹஜ் யாத்திரை செல்ல 6 கோடி ரூபாய் நிதி உதவி, ஹாஜியார்களுக்கு மாத சம்பளம் 20,000 ரூபாய், உலமாக்களுக்கு 1,500 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் உதவித்தொகை உயர்வு, உலமாக்களுக்கு மானிய விலையில் இரண்டு சக்கர வாகனம் என கழக அரசின் திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற திட்டங்களை சிறுபான்மை மக்களுக்கு செய்தது உண்டா? சுயலாபத்துக்காக சிறுபான்மை மக்களை பலிகடா ஆக்குகிறார் ஸ்டாலின்.

தாய் கழகத்தில் இணைந்துள்ள நீங்கள் அம்மாவின் வழியில் ஒரு சிறப்பான பொற்கால ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் சரித்திர சாதனை திட்டங்களை பட்டிதொட்டியெங்கும் எடுத்து கூறி வரும் தேர்தலில் கழகம் வெற்றிபெற அயராது பாடுபட வேண்டும். உங்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உருவாக்கித் தருவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.