தற்போதைய செய்திகள்

ஸ்டாலினுக்கு சிறுபான்மை மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை

சி.ஏ.ஏ. குறித்து தொடர்ந்து விஷம பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலினுக்கு சிறுபான்மை மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகர் தெற்கு தொகுதி சார்பில் அம்மாவின் 72-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் கீரைத்துறையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன் தலைமை தாங்கினார். இதில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட கழக துணை செயலாளர் தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, முன்னாள் துணை மேயர்கள் நவநீதகிருஷ்ணன், திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

அம்மாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து அம்மாவிற்கு மாபெரும் புகழ் சேர்த்துள்ளார். எம்.ஜி.ஆர் தன் படங்களில் நல்ல நல்ல கருத்துக்களை கூறி இளைஞர்களுக்கு இலக்கணமாக திகழ்ந்தார். ஆனால் இன்றைய திரைப்படங்களில் இளைஞர்களுக்கான நல்ல கருத்துக்கள் வருவதில்லை. அம்மா இல்லாத நேரத்தில் கட்சியை முதல்வரும், துணைமுதல்வரும் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் தமிழக வரலாற்றில் 5 மாவட்டங்களை உருவாக்கிய அரசு அதிமுக அரசு.

மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு,ஒரே ரேஷன் கார்டு முறையால் மாநிலத்தில் எந்த இடத்திற்கும் சென்று இனி ரேசன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். கர்நாடகாவுக்கோ, ஆந்திராவுக்கோ பிழைக்க சென்றாலும் அங்கும் ரேசன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். தி.மு.க.வில் நல்ல திட்டங்கள் எதையாவது செய்தார்களா? எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் திமுக பிரதிபலன் எதிர்பார்க்கும்.

ஸ்டாலின் மதுரை பொதுக்கூட்டத்தில் குரங்கு கதையை கூறியது திமுக ஆட்சியில் அனுபவங்களை தான் கூறியுள்ளார். அதிமுகவின் கதையை முடிப்பேன் என்று கூறிய ஸ்டாலினுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். அதிமுக அரசை கருணாநிதியாலேயே தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. அம்மா இருக்கும்போது ஸ்டாலினை ஒரு பொருட்டாக கூட கண்டு கொள்ள மாட்டார்.

திமுக ஆட்சியில் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தபோது உயிருக்கு அஞ்சி மதுரைக்கு வர பயந்தார். இன்றைக்கு அதிமுக ஆட்சியில் நாளுக்கு நாள் சுதந்திரமாக எந்தவொரு ஆபத்தில்லாமல் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். ஆனால் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார். இப்படி சொல்ல அவருக்கு என்ன தகுதி உள்ளது.

பலகட்சிகள் தாவி தற்போது திமுகவில் இணைந்த கண்ணப்பனுக்கு எதற்கு விழா? செல்லாத நோட்டு எங்கு இருந்தால் என்ன. தரவரிசை பட்டியலில் முதல் இடம் வழங்கியவர்கள் கன்னத்தில் அடிக்க வேண்டும் என்று கூறுகிறார் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின். இதை எல்லாம் மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

முதல்வர் சட்டசபையில் சி.ஏ.ஏ.வால் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டவர்களை சுட்டி காட்டுங்கள் என்று கேட்டபோது பதில் கூற முடியாமல் ஸ்டாலின் இருந்ததில் இருந்தே சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகி விட்டது. குடியுரிமைச் சட்டத்தை பற்றி ஸ்டாலின் பல்வேறு பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை கூட அவர் இழந்து விட்டார். சிறுபான்மையின மக்களிடத்தில் விஷம பிரச்சாரம் செய்துவரும் ஸ்டாலினுக்கு சிறுபான்மையின மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.