சிறப்பு செய்திகள்

‘அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி’ சார்பில் சென்னை, கோவையில் இலவச பயிற்சி : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை

ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ‘அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி’ பயிற்சி மையத்தின் மூலம் சென்னை, கோவையில் இலவச பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் நல்லாதரவுடன் அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய தேர்வாணையம் மூலம் குடிமை பணிகளுக்காக நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் முதன்மை தேர்வில் தகுதி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமி பயிற்சி மையத்தின் சார்பில் சென்னை மற்றும் கோவையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் மூத்த குடிமைப்பணி அதிகாரிகள் ஆளுமைத் தேர்வும், ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மாதிரி ஆளுமைத் தேர்வு பற்றிய மேலும் விவரங்களை www.ammaiasacademy.com என்ற பயிற்சி மைய இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 0422-2472222 வாட்ஸ் அப் எண்- 8760674444”.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.