தற்போதைய செய்திகள்

ஸ்டாலின் நாடகம் இனி எடுபடாது – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திட்டவட்டம்

தூத்துக்குடி:-

அரசியல் ஆதாயத்துக்காக மக்களை போராட தூண்டி விடும் ஸ்டாலின் நாடகம் இனி எடுபடாது என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி சிவந்தா குளம் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்துக்குள் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக துவக்கப்பட்ட பள்ளியில் பயிற்சி பெற வருபவர்களை அழைத்து வருவதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட பேருந்தினை தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் வி.ப.ஜெயசீலன், தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, பெ.சின்னப்ன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நல்லாட்சி நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சி செய்த 2006- 2011-ம் ஆண்டில் தமிழக மக்களுக்கு எந்தவித மக்கள் நலத்திட்டங்களையும் செய்யவில்லை. திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டார்களே தவிர தமிழக மக்களின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை பற்றி சிறிதளவும் திமுகவினர் எண்ணிப் பார்க்கவே இல்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து தனியார் கேபிள் டிவி நடத்தும் திட்டத்தை அறவே ஒழித்து அரசு மூலம் கேபிள் டிவி நடத்தும் திட்டத்தை கொண்டு வந்தார்.

தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருவதை கண்டு பொறுக்க முடியாமல் திமுகாவினர் குடியுரிமை திருத்த சட்டத்தை கையில் எடுத்து ஒரு சில மதத்தினரை போராட்டம் நடத்த தூண்டி விடுகின்றனர். அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடகம் இனி மக்களிடையே எடுபடாது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், தொழிலாளர் உதவி ஆணையர் முகமது அப்துல் காதர், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் சம்சுதீன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவர் மோகன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் குணசேகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய் என்ற விண்ணரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.