தற்போதைய செய்திகள்

ஆயிரம் பிரசாந்த் கிஷோர் வந்தாலும் கழகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது – கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

கடலூர்

ஆயிரம் பிரசாந்த் கிஷோர் வந்தாலும் கழகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் தேரடி தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் நகர செயலாளர் ஆர்.குமரன் தலைமை தாங்கினார். நகர கழக அவைத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.வி.மணி, வி.கே.வெங்கட்ராமன், நகர கழக பொருளாளர் எஸ்.தனசேகர், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்.கே.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2016-ம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் அம்மாவுடனான முதல் நிகழ்ச்சியிலும் கடைசி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட வாய்ப்பை பெற்றவன் நான் என்பதை பெருமையோடு நினைவு கூர்கிறேன். உலகம் போற்றும் ஆளுமையாக திகழ்ந்தவர் அம்மா. தமிழக மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து மறைந்த அம்மா தமிழகத்தில் பெண்கள் முன்னேற வேண்டும் என்று மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம், தொட்டில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மகளிர் காவல் நிலையம் என பெண்களை ஆளுமைகளாக மாற்ற வேண்டும் என்று பல திட்டங்களை கொண்டு வந்தார்.

அரசின் சார்பில் எந்த நலத் திட்டங்கள் ஆக இருந்தாலும் சரி, விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் பெண்களுக்கான முத்துலட்சுமி பேறுகால திட்டம் என அனைத்து திட்டங்களையும் பெண்களிடமே வழங்கினார். பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கமும், பேறுகாலத்தில் 18,000 ரூபாயும் கொடுத்து பல குடும்பங்களில் பெற்றோர்களின் சிரமங்களை தீர்த்து வைத்தார். அம்மாவின் திட்டங்கள் இன்றளவும் தமிழகம் முழுவதும் அனைவராலும் பாராட்டப்படும் திட்டங்களாகும்.

கடலூருக்கு ஒரு மிகப்பெரிய பெருமை உண்டு. அம்மா அவர்கள் அரசியலில் அடியெடுத்து வைத்த இடம் கடலூர் மஞ்சை நகர் மைதானம் என்ற பெருமை. என்றென்றும் தமிழக அரசியலில் நிலைத்திருக்கும். அம்மா ஆட்சிக் காலத்தில் உலகமே வியக்கும் வண்ணம் பல திட்டங்களை கொண்டு வந்தார். மழைநீர் சேகரிப்பு திட்டம், புதிய வீராணம் திட்டம் ஆகியவை அதற்கு எடுத்துக்காட்டு. வீராணம் திட்டத்தை 18 மாதங்களில் முடிப்பேன் என்று கூறி 16 மாதங்களில் முடித்து சென்னை மக்களின் தாகம் தீர்த்தவர் அம்மா.

புரட்சித்தலைவர் வழியில் அம்மா ஆட்சி நடத்தினார். அம்மாவின் வழியில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். 100 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்து தமிழகம் 6-வது முறையாக மத்திய அரசின் கிருஷி கர்மா விருதை பெற்றுள்ளது. அதற்கு காரணம் காவேரி டெல்டா விவசாயிகள் தான். வேளாண் பெருங்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவேரி டெல்டா பாதுகாப்பு மண்டலம் திட்டத்தை அறிவித்து விவசாயிகளின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்த திட்டத்தை நிறைவேற்றி வேளாண் உற்பத்தி செய்யும் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் தந்திருக்கிறது இந்த அரசு.

கடலூரில் ஹால்தியா பெட்ரோ கெமிக்கல் என்ற நிறுவனம் விரைவில் வரவுள்ளது. இதற்காக 2200 ஏக்கர் ஒதுக்கி இந்த திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். விரைவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கடலூர் மக்களின் பொருளாதாரம் உயரும். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வாங்கி அதற்கு நிதி ஒதுக்கி செய்து உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர். தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகத்தை எளிதாக்கிய பெருமை முதல்வரை சாரும்.

தமிழக பட்ஜெட்டில் ரூ.34,000 கோடி பள்ளிக் கல்வித் துறைக்கும், ரூ.16,000 கோடி வேளாண்மைத் துறைக்கும், ரூ.20,000 கோடி சுகாதாரத் துறைக்கும் ஒதுக்கி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று இருக்கிறார். நமது முதல்வர் மிக சிறந்த ஆட்சியை நடத்தி கொண்டிருப்பதால் ஸ்டாலினுக்கு பொறாமை. அதனால் பிரசாந்த் கிஷோர் என்ற வட இந்தியரை கொண்டு வந்து தேர்தல் வியூகம் என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அண்ணா திமுகவுக்கு எதிராக ஒருபோதும் ஆயிரம் பிரசாந்த் கிஷோர் வந்தாலும் ஈடு கொடுக்க முடியாது என்பதை வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு நிரூபிப்போம். அண்ணா திமுகவுக்கு நிகரான மக்களுக்காக பணியாற்றும் ஒரு இயக்கம் தமிழகத்தில் இல்லை.

தேசிய அளவில் தமிழகம் பல துறைகளில் முன்னேற்றம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. தமிழக அரசு தொழில் கொள்கைக்காக ஒற்றைச்சாளர முறையில் எளிதாக புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் 1,100 பேர் சிறு, குறு தொழில் தொடங்க விண்ணப்பித்து இருந்தனர்.

அதில் 1026 பேருக்கு உடனடியாக அனுமதி வழங்கினோம். 80 பெரும் தொழிற்சாலைகளுக்கு விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் 72 பேருக்கு உடனடியாக அனுமதி வழங்கிய அரசு இந்த அரசு என்பதை மிகவும் பெருமையாக சொல்லிக் கொள்கின்றோம். ஆட்டோ மொபைல் உற்பத்தியில் உலக அளவில் தமிழகம் முதல் 10 இடங்களில் உள்ளது. உலக அளவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இதெல்லாம் நமது ஆட்சிக்கு கிடைத்த பெருமை.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.