தற்போதைய செய்திகள்

தமிழக மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

கோவை

தமிழக மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் திவான்சாபுதூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கார்த்திக் அப்புசாமி தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த விழா தமிழகம் மட்டுமன்றி தமிழ் மக்கள் வாழும் அனைத்து இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனென்றால் அம்மா அவர்கள் மிகப்பெரிய சகாப்தம். தமிழகத்தின் உரிமையை மீட்டெடுத்த ஒரே தலைவி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தீயசக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்றி நல்லதொரு ஆட்சியை தந்தார். அவரது மறைவிற்கு பின்பு அதிமுகவிற்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையே கட்சியை ஒருங்கிணைத்து கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றினார். மாபெரும் இயக்கமாக அதிமுகவை மாற்றிக் காட்டினார். தன் உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் தீவிர பிரச்சாரம் செய்து தமிழகத்தில் தொடர் ஆட்சியை தந்து சென்றுள்ளார். மறைந்தாலும் அவர் தமிழக மக்களுக்காக கொண்டு வந்த எண்ணற்ற திட்டங்களால் அனைத்து குடும்பங்களிலும் வாழ்ந்து வருகிறார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்த ஆட்சியை கலைக்க சதிகளை அரங்கேற்றி வருகிறார் மு.க.ஸ்டாலின். தினம் ஒரு அறிக்கை, எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் அது குறித்து குறைகூறுவது, திட்டங்களை தடுப்பது, சட்டசபையில் வெளிநடப்பு செய்வது, சட்டையை கிழிப்பது இப்படி தினந்தோறும் ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார். திமுக ஆட்சியில் இருண்ட மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

மடிகணினி திட்டம், கல்விக்கு அதிக நிதி, தாலிக்கு தங்கம், வேலைக்கு செல்லும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் என எண்ணற்ற திட்டங்களை தந்து சென்றுள்ளார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சிறந்த ஆட்சியை தந்து வருகிறார்கள். இதனால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல் இடம் வகிக்கிறது. நல்ல திட்டம் வந்தால் வரவேற்க வேண்டும். ஆனால் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் குறைகளை கூறி அறிக்கை விடுவது ஸ்டாலினின் வேலை. 2006- 2011-ல் தமிழகத்தில் திமுக ஆட்சி செய்த போது தமிழகத்திற்கு எந்த ஒரு பயனுள்ள திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்ற திமுகவினர் இங்கு எங்கே என்று தெரியவில்லை. ஆகவே தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். ஸ்டாலின் நடத்தும் நாடகம் தமிழக மக்களிடம் இனி ஒருபோதும் எடுபடாது. சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வரும் தமிழக மக்களிடையே பொய் பிரச்சாரத்தை தூண்டிவிட்டு பிரிக்க நினைக்கிறார் ஸ்டாலின். குடியுரிமை பிரச்சினையில் சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட விடமாட்டோம். கழக அரசு சிறுபான்மையினருக்கு துணையாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட நடிகருமான ரவிமரியா, ஒன்றிய செயலாளர் ஜி.கே.சுந்தரம், வாசு, ஒன்றியக்குழு தலைவர் சாந்தி கார்த்திக், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏ.ஆர். வி.சாந்தலிங்க குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.சசிகுமார் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பிசி.சக்திவேல், கனகராஜ், கே. என்.ஆர்.சுந்தர்ராஜ், ஜெயலட்சுமி செந்தில்வேல், பத்மநாபன், ஆனந்த ஜோதிமணி, ரத்தினசபாபதி, ஜெயபிரகாஷ், மணி (எ)பழனிச்சாமி, ஷாஜகான் , ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.