சிறப்பு செய்திகள்

காவேரி- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் தொடக்கம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை

காவேரி, குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்துள்ளது.

விளைச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் விவசாயிகள் கேட்கும் இடங்களில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் அன்னவாசலில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டு இதுவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 68 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் பயனாக 4,827 விவசாயிகளிடமிருந்து இதுவரை 29,405 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

யார் நினைத்தாலும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்ற எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது தமிழக அரசு சட்டமன்றத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டு உள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பான எந்த ஒரு திட்டமும் டெல்டா பகுதிகளில் நடைபெறாது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஊராட்சி தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவு திட்டமான காவேரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.7,677 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படவுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட பணிக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் முப்போகம் விவசாயம் செய்ய முடியும். இதன் பயனாக செழிப்பான மாவட்டமாக மாறுவதுடன் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும். மேலும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெற வேண்டும்.

அதேபோல் காவேரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கு புதுக்கோட்டை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மூலம் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மிக விரைவில் இந்த திட்டம் தமிழக முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கும். காவேரி- குண்டாறு இணைப்பு திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கண்மாயில் அந்த தண்ணீரை கொண்டு வருவதற்கு வாய்க்கால் வெட்டும் பணி விரைவில் நடைபெறும். இந்த பணியில் எந்த ஒரு பகுதிக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து குளங்களுக்கு நீர் வந்து சேரும் அளவில் ஆங்கங்கே முறையாக ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் வந்து சேரும் வகையில் இந்த பணி நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.