சிறப்பு செய்திகள்

திருவாரூரில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் முதலமைச்சருக்கு 7-ந்தேதி பாராட்டு விழா

சென்னை

காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை சட்டப்பேரவையில் கடந்த 9-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிவிப்பு 10 நாளில் சட்டமாக இயற்றப்பட்டது. கடந்த 19-ந்தேதி பாதுகாக்கப்பட்ட காவேரி டெல்டா வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்து உரையாற்றுகையில், ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார். விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் முழுவதும் காவேரி டெல்டா மண்டல பகுதிகள் ஆகும்.கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி ஆகிய தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பகுடி ஆகிய பகுதிகள் காவேரி டெல்டா மண்டல பகுதிகள் என்று முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான சட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மேலும் கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த தமிழக அரசின் அரசாணை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்புக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் நாள்தோறும் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை திருச்சி சுற்றுலா மாளிகையில், காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிபடுத்திடவும், காவேரி டெல்டா பகுதிகளை ‘‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’’ அறிவித்து சட்டம் இயற்றியமைக்காக பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தனர்.

மேலும் காவேரி டெல்டா பகுதிகளை ‘‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’’ அறிவித்து சட்டம் இயற்றியமைக்காக 7.3.2020 அன்று திருவாரூரில் விவசாய சங்கங்களின் சார்பில் நடத்தப்படவுள்ள முதலமைச்சருக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் ஆர்.காமராஜ், டாக்டர் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் இதுதொடர்பாக விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:”- 

காவேரி நடுவர் மன்ற தீர்ப்பினை கெஜட்டில் வெளியிட செய்த அப்போதைய முதலமைச்சர் அம்மாவுக்கு எங்கள் சங்கம் சார்பில் 2013-ம் ஆண்டு மார்ச் 9-ந்தேதி தஞ்சையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டா பகுதி அழிந்துவிடும் என்ற கவலையில் இருந்த எங்களுக்கு டெல்டா நிரந்தரமாக இருக்கும் என்ற உறுதியை தரும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டாவை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகிற மார்ச் 7ந்தேதி திருவாரூர் அம்மா சதுக்கத்தில் பாராட்டு விழா நடத்த இருக்கிறோம். மறைந்த முதல்வர் அம்மாவுக்கு பாராட்டு விழா நடத்திய போது பொன்னியின் செல்வி என்ற பட்டம் வழங்கினோம். அப்போது அது அமைந்தது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் ஒரு சிறந்த செயல்வீரராக இருக்கிறார். காவேரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பினை சேலத்தில் வெளியிட்ட உடன் சட்டமன்றத்திலும் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.

பொதுவாக ஒரு மசோதா நிறைவேற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும். ஆனால் வேகமாக செயல்பட்டு 10 நாட்களில் சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி, அரசிதழில் வெளியிடச் செய்து உள்ளார். இதனால் ‘சோழநாடு சோறுடைத்து’ என்ற வார்த்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும்.

2, 3 மாதமாக இந்த திட்டத்தை ரகசியமாக வைத்து நிறைவேற்றியிருக்கிறார். ஆகவே அவருக்கும் பட்டம் கொடுக்க முடிவு செய்துள்ளோம். இது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதை பாராட்டு விழாவில் அறிவிப்போம். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடையாணை பெற்றவர் அம்மா.

காவேரியை அரசியல் ஆக்க வேண்டாம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சி உள்ளிட்ட பகுதிகள் விடுபட்டு இருப்பதாக சொல்கிறீர்கள். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் ஓடுகிறது. இந்த பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டியது இன்றியமையாதது. மேலும் இந்த மண்டலத்தில் கரூர், மாயனூர், அரியலூரின் ஒரு பகுதி, கடலூர், சிதம்பரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணையும் என்று தெரிகிறது.

இந்த சட்டம் இரு நாட்களில் வெளியாகும். அப்போது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் தீரும். அந்த மசோதாவில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோசித்துதான் முடிவெடுத்துள்ளார்.மணல் அள்ளுவதை அரசே மேற்கொள்ள வேண்டும். தனியாருக்கு விடக்கூடாது. இது தொடர்பாக திருவாரூரில் நடக்கும் பாராட்டு விழாவின்போது முதல்வரிடம் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெறும் திருவாரூரில் அமைந்துள்ள வன்மீக புரம் அம்மா அரங்கில் பந்தல் அமைக்கும் பணிக்கு நேற்று கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவாரூர் மாவட்ட விவசாய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.