தற்போதைய செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடக்கவில்லை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

சென்னை 

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2012-13-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்ததாக கடிதம் வந்தது. அதில் கையெழுத்து கூட இல்லை.
அந்த மொட்டை கடிதம் குறித்து தீவிர விசாரணை நடத்தினோம். விசாரணையின் முடிவில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

2019-20-ம் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ந் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 4-ந் தேதி வெளியிடப்படுகின்றன. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4-ந் தேதி தொடங்கி, மார்ச் 26-ந் தேதி முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 14-ந் தேதி வெளியிடப்படுகின்றன.

இந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேர் எழுத உள்ளனர்.12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ந் தேதி தொடங்கி, மார்ச் 24-ந் தேதி நிறைவு பெறுகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ந்தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.