தற்போதைய செய்திகள்

அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் குறை கூறுவதே ஸ்டாலினுக்கு வாடிக்கை – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

திருப்பூர்

அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் குறை கூறுவதே ஸ்டாலினுக்கு வாடிக்கை என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் காங்கேயம் ஒன்றிய கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா படியூர் முத்தாலம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி கழக செயலாளர் பி.பி.இளங்கோ, தலைமை வகித்தார். இளைஞர், இளம்பெண்கள் பாசறை, கே.சிவகார்த்திக், வரவேற்றார் ஒன்றிய கழக துணை செயலாளர் பேபி பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.

திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், தலைமை கழக பேச்சாளர் ம.வீரபெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழாவை இன்றும் தமிழகம் முழுவதும் ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அம்மா அவர்கள் தமிழக மக்களுக்காக என்னென்ன திட்டங்களை தர வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான முறையில் ஆட்சி செய்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

இதனால் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார். காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்பு போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆனால் எதை செய்தாலும்,எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் ஸ்டாலின் குறைகூறி வருகிறார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தால் சிறுபான்மையினருக்கு சிறிதளவும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதுதொடர்பாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.சிறுபான்மை மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சிறுபான்மையினருக்கு மத்தியில் திமுக அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுபான்மை மக்களிடையே திமுகவினர் தவறான பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர். சிறுபான்மை மக்களுக்காக ஏராளமான திட்டங்களை அம்மா வழங்கி இருக்கிறார்.கழக அரசு சிறுபான்மை மக்களுக்கு நலன் செய்யும் அரசாக பல்வேறு திட்டங்களை அறிவித்து கொண்டு இருக்கிறது.

ஆகவே,சிறுபான்மை மக்கள் அச்சப்பட வேண்டிய தில்லை. உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எங்களுக்கு வரும் பிரச்சினையாக கருதி அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். என்றுமே சிறுபான்மை மக்களின் அரணாக கழக அரசு இருக்கும்.

இன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருந்தாலும், இன்றைக்கு சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் முதல் மாநிலம் என்று இந்தியா டுடே என்ற ஆங்கில நாளேடு தொடர்ந்து இரண்டு முறை விருதை கொடுத்திருக்கிறது.

அப்படி அமைதியாக வாழுகின்ற மாநிலத்தில் வேண்டுமென்ற திட்டமிட்டு,தூண்டுதலின் பேரில் அவதூறான செய்திகளை பரப்பி, சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எந்த வகையிலும், அம்மாவுடைய அரசு அதற்கு துணை நிற்காது. தமிழகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழரும், சிறுபான்மை மக்களாக இருந்தாலும், வேறு மக்களாக இருந்தாலும் சரி, அத்தனை பேரையும் பாதுகாக்கின்ற அரசு அம்மாவுடைய அரசு.

இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.