திருவண்ணாமலை

ஆரணி சூரியக்குளம் பாதை ரூ.6.50 கோடியில் சீரமைப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்.

திருவண்ணாமலை

ஆரணி சூரியக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை ரூ.6.50 கோடியில் சீரமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- 

பேரறிஞர் அண்ணாவின் கனவை நிறைவேற்றும் வகையில் ஏழைகளுக்கு விலையில்லா அரிசியை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழங்கினார். அம்மா அவர்களை பின்பற்றி ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அண்ணாவின் பெயரில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறயைினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உட்பட 130 பேருக்கு அண்ணா விருது அறிவித்துள்ளனர்.

கழக ஆட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பில் 600 ஏரிகள் தூர் வாரப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் 1242 குளங்கள் 12 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. வண்டல் மண்களை விவசாய நிலத்திற்கு இலவசமாக எடுத்து செல்லவும் அரசு அனுமதி வழங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆரணியில் உள்ள சூரியக் குளத்திற்கு தண்ணீர் வரும் வழியை ரூ.6.50 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது.

ஆரணி பகுதியில் பல தார்சாலைகள், மழைநீர் வடிகால், பேவர்பிளாக் சாலைகள் உள்ளிட்ட பணிகள் ரூ.10 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுபட்டுள்ள பகுதிகளில் தார்சாலை அமைக்கவும், பேவர்பிளாக் சாலைகள் அமைக்கவும் ரூ.5 கோடி கோரப்பட்டுள்ளது. அந்த நிதியும் சில நாட்களில் கிடைத்துவிடும். மேலும் இவ்வாண்டில் ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றிய பகுதிகளில் வீடில்லா ஏழைகள் 152 பேருக்கு வீடுகட்ட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆரணி சட்டமன்ற தொகுதியில் 600 இந்திரா குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் எண்ணற்ற திட்டங்கள் ஆரணி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இப்பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஜி.ரங்கநாதன், அரசு வழங்கறிஞர் க.சங்கர், நகர செயலாளர் அ.அசோக்குமார், பால் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, பாசறை ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அ.கோவிந்தராசன், மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், கூட்டுறவு நிர்வாகிகள் கொளத்தூர் ப.திருமால், சேவூர் ஜெ.சம்பத், ஜோதிலிங்கம், சுந்தரமூர்த்தி, பிஸ்கட் குமரன், அம்மா பேரவை ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.