திருப்பூர்

ஓட்டுக்காக எதிர்க்கட்சியினர் மக்களிடம் நடிக்கிறார்கள் – முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் குற்றச்சாட்டு

திருப்பூர்

ஓட்டுக்காக எதிர்க்கட்சியினர் மக்களிடம் நடிக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார்.

திருப்பூர் 53-வது வார்டு அதிமுக சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் வீரபாண்டியில் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் சே.தாமோதரன், பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன், தலைமை கழக பேச்சாளர் முத்து மணிவேல் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்துக்கு முன்னாள் கவுன்சிலர் கேபிள் எம்.சிவா தலைமை தாங்கினார்.

இந்கூட்டத்தில், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-

அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் திருப்பூருக்கு பெயர் சொல்கிற அளவிற்கு திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் எல்லாம் ஓட்டுக்காக பல்வேறு முரண்பாடான கருத்துக்களை மக்களிடத்திலே சொல்லி நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆட்சியிலே எதுவுமே நடைபெறாதது போலவும் இந்த ஆட்சி மத்திய அரசோடு இணைந்து இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதாகவும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாட்டிற்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் நாம் கொண்டுவர முடியும் அந்த நிலை மத்திய அரசாங்கத்திடம் இருந்து நிதியை பெற்று திட்டங்களை பெற்றுக் கொண்டு வந்தால்தான் தமிழ்நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு காரணமான எங்களை கொண்டு வர முடியும்.

அதனால் ஒரு இணக்கமான அரசாக இன்றைக்கு நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை பொறுத்துக்கொள்ள முடியாது எதிர்க்கட்சிகள் எல்லாம் இன்றைக்கு குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழக மக்களுடைய பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கின்றோம் திருப்பூரில் கூட சொல்லக்கூடிய அளவில் திட்டங்களை அளித்தது அம்மா அரசுதான்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம், நான்காவது குடிநீர் திட்டம், திருப்பூருக்கு மருத்துவக்கல்லூரி என்று அம்மா அவர்களின் அரசான முதலமைச்சர் எடப்பாடியாரின் திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே என்றென்றும் நீங்கள் இந்த அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

வி.ராதாகிருஷ்ணன், கே.என்.சுப்பிரமணியம், பண்ணையார் பழனிசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.