தற்போதைய செய்திகள்

மதுரை பழைய ஏ.வி.பாலம்-யானைக்கல் பாலம் விரைவில் இருவழி பாதையாக மாற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

மதுரை

மதுரை பழைய ஏ.வி.பாலம்-யானைக்கல் பாலம் விரைவில் இருவழி பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4-வது மண்டலம், 91-வது வார்டு ஜீவா நகர் 1-வது மெயின் சாலையில் 14-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைப்பதற்கான பணிகளையும், ஜீவாநகர் விரிவாக்கப்பகுதிகளுக்கு ரூ.10.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பணியையும் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

மதுரை மாநகராட்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டலம் எண்.4 வார்டு எண்.;91 ஜீவா நகர் மெயின் வீதியில் ஏறத்தாழ 1100 மீட்டர் நீளத்திற்கும், 7 மீட்டர் அகலத்திற்கும் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த சாலையைதான் வார்டு எண்.91 மற்றும் 92 பகுதி பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் ஜீவா நகர் விரிவாக்கப்பகுதி மேட்டுப்பகுதி என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ரூ.10.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய மெயின் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு ஜீவா நகர் பகுதிகள், மீனாம்பாள்புரம் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இன்று முதல் குடிநீர் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஓரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்ட அனுமதி பெற்று சாதனை படைத்த முதலமைச்சர் அவர்களுக்கு நாளை மறுநாள் மதுரை மாநகரின் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட உள்ளது. மதுரை மாநகரை சீர்மிகு நகர திட்டமாக மாற்றுவதற்கு ரூ.1500 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சரின் அறிவித்தப்படி லோயர்கேம்பில் இருந்து இரும்பு குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் கிடைப்பதற்கான இரண்டு கட்டப் ஒப்பந்தப்பணிகள் முடிக்கப்பட்டு மூன்றாம் கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இத்திட்டத்திற்கான பூர்வாங்க பூமி பூஜை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் தேக்கி வைப்பதற்கு வித்திட்ட முதலமைச்சருக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காளவாசல் பகுதியில் நடைபெறும் பால பணியினால் மதுரைக்கு வரும் குடிநீர் மெயின் ராட்ச குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் அதை சரிசெய்யும் பணிகளின் காரணமாகவும், மின்சார வயர்கள் இருப்பதாலும் இதுபோன்ற நிர்வாக சிக்கல்களின் காரணமாகவும் காளவாசல் பாலப்பணியில் தாமதம் ஏற்படுகிறது விரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரில் பல்வேறு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது பெரியார் பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக நான்கு இடங்களில் தற்காலிக பந்தல் அமைக்கவும், குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கோரிப்பாளையம் சந்திப்பில் விரைவில் பாலப்பணி துவங்கப்பட உள்ளது மேலும் பழைய ஏ.வி.பாலம், யானைக்கல் பாலம் ஆகிய பாலங்கள் இரண்டு வழி பாலமாக போக்குவரத்திற்கு எளிதாக செல்லும் வகையில் மாற்றப்பட உள்ளது இதற்கான அறிவிப்பு விரைவில் மானியக் கோரிக்கையின்போது தெரிவிக்கப்படும். மேலும் போக்குவரத்து நெரிசல் கொண்ட தெற்கு வாசல் பாலமும் இரண்டு வழி பாலமாக மாற்றப்பட உள்ளது இட ஆர்ஜித பணிகளின் காரணமாக பாலப்பணிகளில் தாமதம் ஏற்படுகிறது விரைவில் அனைத்துப்பணிகளும் துவங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் குழந்தைவேலு, சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவிப் பொறியாளர் சங்கிலி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனா்.