தற்போதைய செய்திகள்

மக்களின் முன்னேற்றத்துக்காக தொலைநோக்கு திட்டங்களை தந்தவர் புரட்சித்தலைவி அம்மா – கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. புகழாரம்

ஈரோடு

மக்களின் முன்னேற்றத்துக்காக தொலைநோக்கு திட்டங்களை தந்தவர் புரட்சித்தலைவி அம்மா என்று ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்டம் சூரம்பட்டி பகுதிக் கழகம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் ரங்கம்பாளையத்தில் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்டக் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ வரவேற்புரையாற்றினார்.

சூரம்பட்டி பகுதி செயலாளர் ஆர்.ஜெகதீசன், 34-வது வட்ட கழக செயலாளர் டி.கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கழக கலைப்பிரிவு செயலாளர், திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், தலைமை கழக பேச்சாளர் எம்.எப்.ரகிமான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பின்னர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து அம்மாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அம்மாவின் அரசு மக்களுக்கான அரசு. மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள், தாலிக்கு தங்கத்துடன் ரொக்கம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, அம்மா குழந்தைகள் நல பெட்டகம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிர் காவல் நிலையங்கள், பெண் கமாண்டோ படை, தொட்டில் குழந்தை திட்டம் வழங்கியவர் அம்மா.

தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக தொலைநோக்கு திட்டங்களை தந்தவர் அம்மா. சிறுபான்மையினரின் நலனில் அம்மா அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஸ்டாலினின் கபட நாடகம் மக்களிடம் எடுபடாது.விவசாயிகளை பாதுகாக்க காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து அதற்கு அரசாணையும் நிறைவேற்றினார்.ஈரோடு மாநகராட்சியில் ரூ.553 கோடியில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சிக்கோட்டை குடிநீர்த்திட்டம் கொண்டு வந்தது அம்மாவின் அரசு.

இத்திட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு சிறப்பு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற ரூ.81 கோடி நிதி ஒதுக்கியது அம்மா அரசு. மாநகராட்சி முழுவதும் தார்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் நலனுக்காக திட்டங்களை நிறைவேற்றுவது அம்மா அரசு. அம்மாவின் அரசுக்கு பொதுமக்கள் தங்கள் நல்லாதரவை வழங்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.