தற்போதைய செய்திகள்

மாணவர்களின் வெற்றியே அம்மா அரசின் லட்சியம் – அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு

திருவள்ளூர்

மாணவர்களின் வெற்றியே அம்மா அரசின் லட்சியம் என்று அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மதுரவாயல் தொகுதி போரூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8 பள்ளிகளை சேர்ந்த 1116 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்றது. ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

உலகத்திலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டத்தை அம்மா அவர்கள் உங்களுக்காக சிந்தித்து சிந்தித்து உருவாக்கியதுதான் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம். அம்மா அவர்கள் மாணவ- மாணவிகளுக்காக 14 வகையான திட்டங்களை தீட்டினார்.

அதில் குறிப்பாக உலகத்தை உள்ளங்கையில் அடக்கும் மடிகணினி திட்டம், ஜாமென்ட்ரி பாக்ஸ், பேனா, பென்சில், நோட்டு புத்தகம், இவை அனைத்தையும் சுமந்து செல்லும் பேக் என நித்தமும் உங்களுக்காக சிந்தித்து திட்டங்களை தீட்டி அதில் வெற்றி கண்டவர் அம்மா அவர்கள். எனவே மாணவ, மாணவிகளாகிய நீங்கள் வரும் பொதுத் தேர்வில் நம்பிக்கையுடன் படித்து இங்கு வெற்றி பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை மற்றும் நோக்கமாகும்.

அம்மா வழியில் வரும் முதலமைச்சர் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் ரூ.34, 181 கோடியை பள்ளிக் கல்வித் துறைக்காக ஒதுக்கி உள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாநில பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கு கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய லட்சியம், குறிக்கோள் ஆகியவை நிறைவேற வேண்டுமென்றால் டிவி, செல்போன் ஆகியவற்றை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தி பொதுத்தேர்வில் அனைவருமே தேர்ச்சி அடைய வேண்டும். இன்று ஏழை மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரி படிப்பை நினைவாக்கும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அந்த வகையில் வரும் மார்ச் 8-ந் தேதி அவரது பொற்கரங்களால் திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற இருக்கிறது. இதன் மூலம் ஏழை மாணவ மாணவிகள் மருத்துவ கனவை நனவாக்கியது அம்மாவின் அரசு என்பதில் பெருமை கொள்வோம். இந்த பள்ளியின் தலைமையாசிரியர் இந்த பள்ளிக்கு அடல் டிங்கரிங் லேப் தேவைப்படுகிறது என்று கூறினார். விரைவில் எனது சட்டமன்ற மேம்பாட்டு நிதி மூலம் பள்ளிக்கு அந்த கட்டிடம் கட்டி கொடுக்கப்படும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் எந்த நோக்கத்திற்காக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனரோ அந்த புனிதமான நோக்கங்கள் நிறைவேற வேண்டும். அதற்காக நீங்கள் வரும் கல்வியாண்டில் அனைத்து மாணவ,மாணவிகளும் தேர்ச்சி பெற வேண்டும்

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காசு ஜனார்த்தனம், எஸ்.அருள்யுகா, வட்ட செயலாளர்கள் எம்.பி. தென்றல்குமார், மதுரவாயல் ஏ.தேவதாஸ், நெற்குன்றம் டி.சத்தியநாதன், என்.எம்.இமானுவேல், தாமோதரன், வீடியோ கோபு, நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்