சிறப்பு செய்திகள்

மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அம்மா அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

மதுரை

மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அம்மா அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 2019-2020-ம் ஆண்டிற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார் முன்னிலையில் நடைபெற்றது. வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

இந்த கூட்டத்தில் முக்கிய அங்கமாக குடிநீர் வழங்குதல், தெரு விளக்கு, வீடு கட்டுவது, சாலைகள் அமைப்பது போன்றவற்றிற்கு மத்திய அரசினுடைய பங்களிப்பு, மாநில அரசினுடைய பங்களிப்பு, நீர் மேலாண்மை இது போன்ற வளர்ச்சித் திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் அன்றாட அவசிய தேவைகளை தீர்க்கக் கூடிய திட்டங்களுக் கெல்லாம் முதலமைச்சர் மாவட்ட ஆட்சித்தலைவர்களை நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, கழிப்பறைகளிலிருந்து தெரு விளக்கு வரை ஒவ்வொரு திட்டமாக ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கி வருகிறார். ஏனென்றால் ஒரு மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்கு அடித்தளமாக, ஆதாரமாக இருப்பது அன்றாட தேவைகளான இதுபோன்ற திட்டங்களேயாகும்.

அதேபோல் வளர்ச்சித் திட்டங்களாக இருக்கின்ற கல்வி, தொழில் போன்ற திட்டங்களிலும் முதலமைச்சரே நேரடியாக ஆய்வுசெய்து வருகிறார். மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்ற திட்டங்கள் மற்றும் நிதிகள் முறையாக பயன்படுத்தப் படுகிறதா என்பதனை கண்காணிப்பதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 32 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாவட்டமாக திகழ்கிறது.

அதில் மாநகராட்சியை பொறுத்தவரை சுமார் 26 லட்சம் வாக்காளர்களை கொண்டுள்ள மாநகராட்சியாக திகழ்கிறது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு நிலுவையில் உள்ள மக்களுடைய கோரிக்கைகளையெல்லாம் எப்படி உடனடியாக தீர்வு காண்பது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மக்களுடைய தேவைகள் அனைத்தும் அரசிடமிருந்து பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு கவனமாக செயல்படுத்தி வருகிறது.

மதுரை மாவட்டம் வளர்ந்து வருகின்ற ஒரு பகுதி. குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு சவாலாக மதுரைக்கு கிடைத்திருக்கிறது. அதேபோல் பல்வேறு திட்டங்களையெல்லாம் மதுரை மாவட்டத்திற்கு கொண்டு வருவதற்கு முதலமைச்சர் முயற்சி செய்து வருகிறார். நீண்டநாள் கோரிக்கையான கூடுதல் ஆட்சியர் அலுவலகம் தேவையை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் வழங்க வேண்டுமென முதலமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டார்.

தற்பொழுது அந்த கட்டடம் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது நடைபெற்ற நிதிநிலை அறிக்கையில் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த நிதிகளெல்லாம் முறையாக கொண்டுபோய் சேர்ப்பதற்கு இந்த குழுவின் தலைவர் முழுமையாக செயல்படுத்துவார் என இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உள்ளாட்சி பிரதிநிகள் தங்களது ஒன்றியங்களுக்கு தேவைப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்து வைக்கும் வேண்டுகோள்களை மத்திய அரசிடம் இந்தக்குழு எடுத்துச்சென்று நிறைவேற்றும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரியங்கா, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், பி.பெரியபுள்ளான், மாநகராட்சி, ஊரக வளர்ச்சி, பேரூராட்சிகள், நகராட்சிகளை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.