தற்போதைய செய்திகள்

இந்தாண்டு ரூ 10ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு : அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல்

தருமபுரி

இந்தாண்டு ரூ 10 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஜோதிப்பட்டி புதிய பகுதிநேர நியாய விலைக்கடையை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கேற்றி வைத்து திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது :-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி காரிமங்கலம் வட்டம், பேகாரஅள்ளி அருகே உள்ள ஜோதிப்பட்டியில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடையையும், 46 பயனாளிகளுக்கு ரூ.28 இலட்சம் மதிப்பிலான பயிர்கடனையும் வழங்கியதில் திறந்து வைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் நியாய விலைக்கடைகள் 449 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 561 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் மற்றும் 9 மகளிர் நியாய விலைக்கடைகள் என ஆக மொத்தம் 1010 நியாய விலைக்கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் நியாயவிலைக்கடைகள் 41 என ஆக மொத்தம் 1060 நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது திறக்கப்படவுள்ள ஜோதிப்பட்டி பகுதிநேர நியாய விலைக்கடை 1061 வது நியாய விலைக்கடையாகும்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், எஸ்.1070 பேகாரஅள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் கட்டுப்பாட்டில் 1 முழுநேர நியாயவிலைக் கடையும், 3 பகுதிநேர நியாயவிலைக்கடைகளும் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. பேகாரஅள்ளி நியாய விலைக்கடை 845 குடும்ப அட்டைகளுடன், செயல்பட்டு வந்தது. குடும்ப அட்டைதாரர்கள் அதிக அளவில் உள்ளதால். அத்தியாவசியப் பொருட்களை பெற சிரமம் ஏற்பட்டு வந்தது, ஜோதிப்பட்டி பகுதிநேர நியாயவிலைக்கடை 562-வது பகுதிநேர நியாய விலைக்கடையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நியாய விலைக்கடையின் மூலம் 183 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள். இந்நியாய விலைக்கடையில் வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் செயல்படும். வரும் நிதியாண்டில் 2020-21 ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் பயிர்கடன்கள், ரூ.2 கோடி மதிப்பில் மகளீர் சுயஉதவி கடன்கள், ஒரு கோடி மதிப்பில் நகை கடன்கள் (பொது), ரூ.20 லட்சம் மதிப்பில் தாணீய இட்டு கடன்கள், ரூ.50 லட்சம் மதிப்பில் விவசாய நகை கடன் ஆகிய கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 4,26,329 குடும்ப அட்டைகளுக்கு 4,24,896 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 99.66 சதவிகிதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சதவிகிதம் தமிழ்நாட்டிலேயே முதல் மாவட்டம் ஆகும். கிஷான் கிரிடிட் கார்டு (உழவர் கடன் அட்டை) வழங்கும் திட்டத்தில் 42,412 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 87 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2018-19 ஆம் ஆண்டிற்கு பயிர்க்கடன் வழங்கிட ரூ.8000 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தல் பயிர்க்கடனாக 2018-19 ஆம் ஆண்டிற்கு ரூ.183 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனில் 40218 விவசாயிகளுக்கு ரூ.242.07 கோடி பயிர்கடனாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் 2019-20ம் ஆண்டிற்கு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்திற்கு 2019-20ம் ஆண்டிற்கு ரூ.260.00 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பெற்ற பயிர்கடனை தவணை தவறாது திரும்ப செலுத்துபவருக்கு 7சதவீத வட்டித் தொகையை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லா விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்புகளை பொது மக்கள், விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் இராமதாஸ், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல்;, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் குமார், துணை பதிவாளர் வரதராஜன் வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், வடிவேலன் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.