திருவாரூர்

குழந்தைகளை பாதுகாக்கும் சட்டதிருத்த மசோதா : மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்

திருவாரூர்

திருவாரூரில் குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட திருத்த மசோதா குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகுப்பு தொடங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திருத்த சட்டம் தொடர்பான சட்ட மருத்துவம் குறித்த மருத்துவ அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கலைமதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.பக்கரிசாமி, தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கலைமதி பேசியதாவது:-

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திருத்த சட்டம், 2019-ன் படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் உளவியல் சார்ந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்போது சட்டம் சார்ந்த நடைமுறைகள் மற்றும் குழந்தைகளின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை கையாள வேண்டியுள்ளதால் மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு இங்கு இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

பாலியல் குற்றங்கள் தொடர்பான அறிக்கைகளை மருத்துவர்கள் சமர்ப்பிக்கும்போது எளிய முறையில் புரிந்து கொள்ளும் வண்ணம் அறிக்கைகளை வழங்க வேண்டும். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்களா என்பதனை அவர்களின் நடவடிக்கை கொண்டு அறிந்து கொண்டு அதனையும் அறிக்கையாக தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இப்பயிற்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பி.செல்வராசு, பெங்களுர், வைதேகி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையத்தை சார்ந்த தடயவியல் மருத்துவம், நச்சுயியல் தலைமைப் பேராசிரியர் ஜெகதீஷ் நாராயண ரெட்டி, சென்னை துளிர் அமைப்பினை சார்ந்த வித்யா ரெட்டி மற்றும் நான்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.