தற்போதைய செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை:-

தேர்தலை சந்திக்க ஸ்டாலின் பயப்படுகிறார். எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மேலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் தலைமை வகித்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசினர். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் எம்.எஸ்.பாண்டியன், மேலூர் பெரியசாமி, வி.இ.வி.ஆர்.ராஜ்சத்தியன், கிரம்மர் சுரேஷ், சீதாராமன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம் மாநகர் மாவட்ட துணை செயலாளர் தங்கம், மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா, ஒன்றிய கழக செயலாளர் கே.பொன்னுச்சாமி, வெற்றி செழியன், நகர செயலாளர் பாஸ்கரன், பொன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன. எந்த மாநிலத்திலும் பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது இல்லை. ஆனால் பெரியார், அண்ணா, புரட்சித்தலைவர் ஆகியோர் கனவை நிறைவேற்றி தந்தவர் புரட்சித்தலைவி அம்மா.

அம்மாதான் இத்திட்டத்தை கொண்டு வந்தார். அம்மா கொண்டு வந்த இத்திட்டத்தை முதலமைச்சர் நடைமுறைப்படுத்த உள்ளார்.1954-ம் ஆண்டு தொடர்ந்து திமுக பிரதான கட்சியாக உள்ளது ஆனால் இன்றைக்கு உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க பயப்படுகிறது. இந்த நிலையை உருவாக்கியவர் ஸ்டாலின்தான்.

இன்றைக்கு முதலமைச்சரின் நிர்வாகத் திறமையால் தமிழகமும் செழுமையாக இருக்கிறது. அதனால் கழகத்திற்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தற்போது உள்ள சூழலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் திமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று ஸ்டாலின் நினைத்து நடுங்கிப் போய் உள்ளார்.

இன்றைக்கு விவசாய பெருமக்கள் அம்மாவின் அரசின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் கடந்த திமுக ஆட்சியில் 2006-2011-ல் ஐந்து வருடம் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்கப்பட்ட தொகை ரூ.9,163 கோடி. ஆனால் இந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்கடன் மட்டும் 49,000 கோடி ரூபாயாகும்.

இதில் இந்த மூன்று ஆண்டுகள் மட்டும் ரூ.27,000 கோடியை விவசாயிகளுக்கு முதலமைச்சர் வழங்கியுள்ளார். தற்போது இந்த ஆண்டிற்கும் ரூ.10,000 கோடி அளவில் பயிர் கடன் வழங்கி வருகிறார். திமுக ஆட்சிக் காலத்தில் ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த பயிர்களை விட நடப்பாண்டில் அதற்கு மேலே வழங்கியுள்ளார்.

தற்போது நீங்கள் வாக்காளர்களை சந்திக்கும்போது அம்மா அரசின் சாதனைகள் திட்டங்களான 100 யூனிட் இலவச மின்சாரம், சிறப்பான சட்டம்- ஒழுங்கு , இந்தியாவில் சிறப்பாக சேவை செய்ததில் கூட்டுறவு துறைக்கு துணை ஜனாதிபதி வழங்கிய விருது, முதலமைச்சர் குடிமராமத்து திட்டம் இதுபோன்ற சாதனை திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும்

அதுமட்டுமல்லாது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தி இதன் மூலம் இந்த மேலூர் பகுதிக்கு இரண்டு போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டு இதன் மூலம் இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்த அரசு இந்த அரசு என்பதை நீங்கள் மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும்.அதுமட்டுமல்லாது நமது கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு நாம் பாடுபட வேண்டும்.வாக்குகள் கேட்கச் சொல்லும் பொழுது நீங்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். திமுகவை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இந்த தேர்தலின் மூலம் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

இதே ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று ஊர் ஊராக சென்று கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பேசினார். ஆனால் தற்பொழுது உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பின்பு அதில் போட்டியிட நடுக்கமாக உள்ளார். இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி 2021 சட்டமன்ற தேர்தலில் நமது வெற்றிக்கு தொடக்கமாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.