கன்னியாகுமரி

நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு பள்ளியை விரைவில் சீரமைக்க நடவடிக்கை – ந.தளவாய் சுந்தரம் உறுதி

கன்னியாகுமரி

நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு பள்ளியை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம், நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்டங்களிலுள்ள 141 பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவிகள் தங்கள் அருகாமையிலுள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று, கல்வி பயில ஏதுவாக, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விலையில்லா தரமான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தி, அத்திட்டம் கடைக்கோடி மாணவ, மாணவிகளுக்கும் சென்றடைகின்ற வகையில் செயல்படுத்தி வந்தார். புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு ஏழை, எளிய கிராமபுற மாணவஇ மாணவிகள் எந்த தடையுமின்றி எளிதாக கல்வி பயில வேண்டும் என்பதற்காக இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தான் தமிழ்நாட்டிலேயே, முதல் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெருமை சேர்ப்பதாகும். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சென்னை போன்ற பெரும் நகரங்களுக்கு இணையான தரமான உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 16 ஆயிரத்து 150 மிதிவண்டிகள் 141 பள்ளிகளை சார்ந்தவர்களுக்கு இன்று வழங்கப்படுகிறது. இதில் 7 ஆயிரத்து 473 மாணவர்களுக்கும், 8 ஆயிரத்து 677 மாணவிகளுக்கும் மிதிவண்டிகள் ரூ.6.37 கோடி மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரால் தான் நமது மாநிலத்தில் 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் வரப்பெற்றுள்ளது. நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு பள்ளியை சீரமைக்க வேண்டும் என்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் உள்பட பலர் கோரிக்கை விடுத்தனர். இப்பள்ளியின் சீரமைப்பை மேற்கொள்ள தொல்லியல் துறையின் அனுமதியை பெற வேண்டும். இப்பள்ளியை சீரமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என எனக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைவில் பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புரட்சித்தலைவி அம்மாவின் அரசு மாணவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர்.மு.ராமன் வரவேற்புரையாற்றினார். எச்.வசந்தகுமார், எம்.பி., என்.சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் முனைவர்.அ.மோகனன் நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.அழகேசன் (அகஸ்தீஸ்வரம்), அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன் (எ) சந்துரு, மாவட்ட முதன்மை கல்வி நேர்முக உதவியாளர் பிருந்தா, நாகர்கோவில், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் தயாபதி நளதா, அரசு வழக்கறிஞர் ராஜகோபால், ரபீக், சுகுமாரன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.