சேலம்

எடப்பாடியார் மீண்டும் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – ஆர்.இளங்கோவன் பேச்சு

சேலம்

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் கூறினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரிப்பட்டியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னதம்பி முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர் பொன்னம்மாள் வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

அம்மா அரசு மக்கள் நலத்திட்டங்கள் வழங்குவதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அம்மா மறைவுக்குபின் இந்த அரசு நிலைக்காது என்று சிலர் ஏளனம் பேசினர். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மூன்றாண்டுகள் நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். மக்கள் நலத் திட்டங்களை வாரி வழங்கி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். அதன் காரணமாக மக்கள் மத்தியில் கழக அரசுக்கு மாபெரும் செல்வாக்கு உருவாகியுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதால் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினர் நகை கடனை தள்ளுபடி செய்கிறோம், விவசாய கடனை தள்ளுபடி செய்கிறோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டனர். அதன்பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடியார் பொதுமக்களிடம் உண்மையை சொல்லி வாக்கு சேகரித்தார். அதன் பலனாக சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டி விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்கிறார். தமிழக மக்கள் நலன் ஒன்றே தன்னலம் எனக்கருதி உழைத்து வருகிறார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 8 ஆண்டுகளில் ரூ.2500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதிமுக அரசு தனக்கு பின்னால் நூறு ஆண்டு காலம் மக்கள் சேவை புரியும் என அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் கூறினார். அதன்படி கழக அரசு நிலைத்து நீடிக்கும். 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழக எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இவ்வாறு ஆர்.இளங்கோவன் பேசினார்.

இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன், உமையாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகர், ஒன்றிய கழக துணை செயலாளர் பெரியசாமி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லிங்கம்மாள் பழனிசாமி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய பேரவை இணை செயலாளர் மணிமாறன, ஒன்றிய இளைஞரணி ரமேஷ், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், பன்னீர்செல்வம், சித்ரா பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.