விழுப்புரம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசிதிருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி பெருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

7 ம் நாள் திருவிழாவான நேற்று  தேரோட்டம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்று காலை மூலவர் அம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. இதன் பின்னர் பகல் 1.55 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட புதிய திருத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் அங்காளம்மா என பக்தி கரகோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அன்னியூர் சிவா, திட்ட இயக்குனர் மகேந்திரன், உள்ளிட்டோர் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜோதி, மேல்மலையனூர் கோயில் உதவி ஆணையர் க.ராமு, அறங்காவலர் குழு தலைவர் சி.செல்வம், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் மணி, உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.