தற்போதைய செய்திகள்

5391 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா வழங்கினார்

நாமக்கல்

ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53 அரசு பள்ளிகளில் பயிலும் 5,391 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53 அரசு பள்ளிகளில் பயிலும் 5,391 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. கொல்லிமலை ஒன்றிய கழக செயலாளரும், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா கலந்து கொண்டு ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 பள்ளிகளை சேர்ந்த 2,117 மாணவ, மாணவிகளுக்கும், சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 22 அரசு பள்ளிகளை சேர்ந்த 1,889 மாணவ, மாணவிகளுக்கும், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 அரசு பள்ளிகளை சேர்ந்த 1,385 மாணவ, மாணவியர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா அவர்கள், பள்ளியில் பயிலுகின்ற 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அதிக நேரம் பள்ளியில் பயிலுவதை ஊக்குவிக்கும் வகையிலும், பள்ளி முடிந்தபின் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தினார். விலையில்லா மடிகணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 2011 முதல் 2019-ம் ஆண்டு வரை 52.97 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.8,456.35 கோடி மதிப்பில் விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 2020-2021-ம் நிதியாண்டில் விலையில்லா மடிகணினி வழங்கும் திட்டத்திற்கென ரூ.966.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011 முதல் 2019-ம் ஆண்டு வரை விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,673 கோடி மதிப்பில் 54,87,342 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,500 கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,500-ம், 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 மதிப்பிலான மடிகணினி மற்றும் கல்வி உதவித்தொகை ரூ.2,000-ம் வழங்கி வருகின்றது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கழக அவைத்தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைதலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், ராசிபுரம் நகர கழக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.பாலசுப்பிரமணியன், வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளரும், ராசிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநருமான எஸ்.பி.தாமோதரன், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், பள்ளி தலைமையாசிரியர்கள் ப.முத்துசாமி, பெ.மாதேஸ்வரன், கி.கேசவன், பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.