தற்போதைய செய்திகள்

மக்கள் பணியாற்றுவதில் கழக அரசு பின்வாங்காது – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

விருதுநகர்

மக்கள் பணியாற்றுவதில் கழக அரசு பின்வாங்காது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாக கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே டபிள்யோ புதுப்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தலைமை வகித்தார்.

இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புைரையாற்றினார். அவர் பேசியதாவது:-

அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்றையாவது ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்று பயன் அடைந்து இருப்பார்கள். இந்திய துணை கண்டத்திலேயே நாட்டு மக்களுக்காக தாலிக்கு தங்கம், மடிகணினிகள் என காலத்தால் அழிக்க முடியாத பல திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்தார். அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நல்லாட்சி நடத்தி வருகிறார். தமிழகத்தில் அதிமுகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக பல்வேறு போராட்டங்களையும் கலவரங்களையும் தூண்டி விட்டு வருகிறது. எந்த காலத்திலும் மதக்கலவரம் சாதி கலவரங்களை அதிமுக அரசு அனுமதிக்காது.

இந்த டபிள்யோ புதுப்பட்டி அதிமுகவின் கோட்டை. நாங்கள் திட்டங்களை செய்து விட்டுதான் உங்களிடம் ஓட்டு கேட்டு வருகிறோம். பணத்திற்காக யாரும் தற்போது ஓட்டு போடுவது கிடையாது. நல்ல மனிதர்களை பார்த்துதான் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். நாங்கள் நல்ல வேட்பாளர்களைதான் தேர்தலில் நிறுத்துவோம். விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 300 கோடி ரூபாயில் அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் எடப்பாடியார் பெற்றுக் கொடுத்துள்ளார். வத்திராயிரப்பு பகுதிக்கு தனி தாலுகா பெற்றுக் கொடுத்தது அதிமுக அரசுதான்.

பல்வேறு இடையூறுகளை தாண்டி வத்திராயிருப்பு பகுதிக்கு தனி தாலுகா வாங்கி கொடுத்துள்ளோம். உலக அரசியலை டபிள்யோ புதுப்பட்டி கிராம மக்கள் தெரிந்து வந்துள்ளனர். மக்கள் ஆதரவு பெற்ற இயக்கம் என்று சொன்னால் அது அதிமுகதான். பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு பிரச்சினைகளை இந்த அரசு தொடர்ந்து எதிர்கொண்டுதான் வருகின்றது. ஆனாலும் மக்கள் பணியாற்றுவதில் அதிமுக அரசு ஒருகாலம் பின்வாங்காது. எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவுக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

கூட்டத்தில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிந்துமுருகன், மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் வசந்திமான்ராஜ், சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியன், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, ராஜபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன், வில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சேதுராமலிங்கம் செய்திருந்தார்.