தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியில் தான் சிறுபான்மை மக்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை

கழக ஆட்சியில் தான் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிள்ளைமார் சங்க மேல்நிலைப்பள்ளியில் அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சிறுபான்மையின மக்கள் அதிமுக ஆட்சியில் தான் மிகவும் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள். கமல், ரஜினி இணைவது அதிமுகவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. சிறுபான்மையினர்களுக்கான பல நலத்திட்டங்களை அதிமுக அரசு செய்து வருகிறது. கமல்ஹாசன் புரட்சிகரமான திட்டம் என்று எதை எதிர்பார்க்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை. அதிமுக அரசு செய்து வரும் அனைத்து திட்டங்களும் புரட்சிகரமானது தான். தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து வீட்டிற்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அதிமுக அரசு வழங்கி வருகிறது. ஏன் நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்கு கூட 100 யூனிட் மின்சாரம் வழங்கி வருகிறது. இப்படி இருக்கும் போது எதை புரட்சிகரமான திட்டம் அவர் எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை.

வரும் தேர்தல்களில் திமுக தான் வெற்றிபெறும் என்ற பொய்யான வதந்தியை தொண்டர்களிடம் கூறி ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். திமுகவிடம் சரக்கு இல்லை. அதனால் தான் பிரசாந்த்கிஷோர் போன்றோர்களிடம் போய் ஆலோசனை கேட்கிறார்கள். வருகிற தேர்தலில் திமுக கரையேறாது.

ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய், காவேரி ஆறு பாயும் மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிப்பு, தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் பெற்று வந்தது என குறை கூற முடியாதபடி இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது. திமுக 15 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்தது. எத்தனை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தது. ஆனால் எங்கள் அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வங்கிகள் மூலம் விரைவில் நிதி பெற்று கட்டி முடிக்கப்பட்டு பாரத பிரதமர் மோடியே தனது கரங்களால் திறந்து வைப்பார்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.