தற்போதைய செய்திகள்

புரட்சிகரத் திட்டங்களை செயல்படுத்தியதால் தான் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு – நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி

மதுரை

புரட்சிகரத் திட்டங்களை செயல்படுத்தியதால் தான் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்று நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.மதுரை கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு திட்டங்களை அம்மா அவர்கள் செயல்படுத்தினார். அவர் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் விளையாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது போல் பழைய மாணவர் சந்திப்பு ஸ்டாலின் டீசர்ட் அணிந்து நாடகம் ஆடினார். ஆனால் அவரை யாரும் ரசிக்கவில்லை. இதில் யார் புலி, பூனை, என்று மக்களின் நன்றாக தெரியும்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை பெற்றுத்தந்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கும் வண்ணம் கழக அம்மா பேரவையின் சார்பில் தாய்மார்கள் பூர்ண கும்ப மரியாதை, கிராமிய கலை நிகழ்ச்சி, உள்ளிட்ட சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. விருதுநகர், ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்க வருகை தரும் முதலமைச்சருக்கு மதுரை விமான நிலையம், கப்பலூர் டோல்கேட், திருமங்கலம் நகரம், மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கள்ளிக்குடி ஆகிய இடங்களில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்கின்றனர். ராஜ்யசபா எம்பி சீட் ஒதுக்குவது பற்றி குறித்து ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். இதுகுறித்து தலைமைக் கழகம் ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கும்.

தமிழகத்தில் துறைகள் பின் தங்கியுள்ளது. புரட்சிகரமான திட்டங்கள் எதுவும் இல்லை என்று கமலஹாசன் கூறியுள்ளார். இன்றைக்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி உள்ளோம். காவேரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக விவசாயிகளுக்கு என பல திட்டங்கள் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துள்ளோம். இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர். இதுபோன்ற திட்டங்கள் எல்லாம் புரட்சிகரமான திட்டங்கள் இல்லையா? இன்னும் புரட்சிகர திட்டங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு நன்மைகள் ஏதேனும் செய்திருந்தால் பொதுவெளியில் பட்டியலிட்டு சொல்லட்டும். கமல்ஹாசனுக்கு புரட்சிகரமான திட்டங்கள் தேவை இல்லை. தமிழக மக்களிடமிருந்து புரட்சிகரமான ஓட்டுகளை பெறுவதற்கு இவ்வாறு பேசி வருகிறார். நாங்கள் ஓட்டுக்காக திட்டங்களை தீட்டுவது கிடையாது. தமிழக மக்களின் நலனுக்காக மட்டுமே திட்டங்களை தீட்டி விடுகிறோம். யார் மக்களுக்கு திட்டங்களை செய்து காட்டுகிறார்கள் யார் வெட்டிப்பேச்சு பேசுகிறார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஸ்டாலின் தொடர்ந்து குடியுரிமை சட்டத்தை பற்றி மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். முஸ்லிம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் அம்மாவின் அரசு என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். சட்டசபையில் கூட இஸ்லாமியர்களுக்கு 30 ஆண்டுகள் பாதுகாவலராக நாங்கள் விளங்கிக் கொண்டு இருக்கிறோம்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பாதுகாவலராக இருப்போம் என்பதில் மாற்றமில்லை. இஸ்லாமியர்கள் குடியுரிமை சட்டத்தை எந்த விதத்திலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என உறுதிபட கூறியுள்ளார். இதே திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு ஏதாவது திட்டங்கள் செய்தது உண்டா? திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு செய்த துரோகங்களை பற்றி எங்களால் எடுத்துச் சொல்ல முடியும். ஆகவே சிறுபான்மையின மக்கள் ஸ்டாலின் சூழ்ச்சிக்கு பலிகடா ஆக மாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.