தற்போதைய செய்திகள்

மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி அ.தி.மு.க – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முழக்கம்

கோவை

மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தாளியூர் பேரூராட்சி கலிக்கநாயக்கன்பாளையத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் மிகவும் எழுச்சியோடு தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவர் கொண்டு வந்த ஒவ்வொரு திட்டங்களால் தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்‌. விலையில்லா மிதிவண்டி, மடிகணினி, அம்மா பரிசு பெட்டகம், தாலிக்குத் தங்கம் என பல்வேறு திட்டங்களை தந்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றினார். இப்படி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். தமிழகத்தின் உரிமை பிரச்சினைகளை போராடி மீட்டவர்.

ஆனால் முக.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது தமிழகத்திற்காக எந்த ஒரு திட்டமும் நிறைவேற முயற்சிக்க வில்லை. திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, மோசடி என தலைவிரித்தாடியது. ஆனால் கழக ஆட்சியில் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் தந்து வருகிறார்கள். சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அது மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உள்ளது.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினையால் 12 மணி நேரத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக கரண்ட் கட் ஆகி தொழில்கள் முடங்கியது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பதவி ஏற்றவுடன் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டினார்.கடந்த எம்பி தேர்தலில் திமுக பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றது. ஆனால் இப்போது மக்கள் திமுகவை புரிந்து கொண்டு விட்டார்கள். ஆகவேதான் விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்தார்கள்.

தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி, பாலங்கள், சாலைகள் சீரமைப்பு, கூட்டு குடிநீர் திட்டம், சமுதாயக் கூடங்கள் என பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி அதிமுக தான் என்று தமிழக மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். ஆகவே எங்களுக்கு தமிழக மக்கள் நலனே முக்கியம். பதவி முக்கியமல்ல. எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எந்நேரமும் பணி செய்வதே எங்களது கடமை.

இவ்வாறு அமைச்சர் எஸ். பி.வேலுமணி பேசினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் டிஎஸ். ரங்கராஜ், தொண்டாமுத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார், தலைமை கழக பேச்சாளர் பாரதிப்பிரியன், மாவட்ட கழக நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, என்.எஸ்.கருப்புசாமி, ஜி.கே.விஜயகுமார், டி.ஏ.சந்திரசேகர், இளைஞரணி மாவட்ட கழக செயலாளர் ஆர்.சந்திரசேகர், வேணுகானம், ராசு (எ) சாமி, ஜெயபால், டிஎம்.மாணிக்கம், லட்சுமிகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.